நம்மில் பெரும்பாலும் பலர் கத்திரிக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. பல ஊட்டச்சத்து நிறைந்த இந்த கத்திரிக்காய் சிலருக்கு அலர்ஜி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்துவதன் காரணமாக அதை ஒதுக்கி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை விரும்பி சாப்பிடும் சில ரசிகர் கூட்டமும் உள்ளது. பிரியாணிக்கு கொடுக்கும் கத்திரிக்காய் தால்சாவில் தொடங்கி கத்திரிக்காய் பச்சடி, கத்தரிக்காய் பஜ்ஜி என பலவிதமான அசத்தல் ரெசிபிகள் இந்த கத்திரிக்காய் வைத்து செய்யலாம். இப்பொழுது அசத்தலான கத்திரிக்காய் பொடி கறி ஒன்று செய்வதற்கான ரெசிபியை இதில் பார்க்கலாம்…
இந்த கத்திரிக்காய் பொடி கறி செய்வதற்கு முதலில் அருமையான பொடி ஒன்று தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 8 காய்ந்த வத்தல், இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
அடுத்ததாக அரை தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இந்த பொருட்கள் அனைத்தும் குறைந்தது மூன்று நிமிடம் ஆவது மிதமான தீயில் எண்ணையுடன் சேர்ந்து நன்கு வருபட வேண்டும். இதில் சேர்த்த மசாலா பொருட்கள் அனைத்தும் பொன்னிறமாக மாறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வறுத்த இந்த பொருட்களை சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக கத்திரிக்காயை கழுவி சுத்தம் செய்து ஒரு கத்திரிக்காயை ஆறாக நாம் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது கத்திரிக்காயை நீளவாக்கில் ஆறு பகுதிகளாக நறுக்க வேண்டும். நறுக்கிய கத்திரிக்காயை அரிசி களைந்த தண்ணீர் அல்லது மோர் தண்ணீர் இவற்றில் போட்டு வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
நீர்ச்சத்து நிறைந்த நாட்டு சுரைக்காய் வைத்து கூட்டு, பொரியல் மட்டும் தானா….. வாங்க அசத்தலான பிரியாணியே செய்யலாம்!
மிதமான தீயில் கத்தரிக்காயை இரண்டு நிமிடம் நன்கு எண்ணெயோடு சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரைக்கப் கெட்டியான புளி கரைசல், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து வதக்க வேண்டும்.
இந்த நேரத்தில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை கத்திரிக்காயுடன் சேர்த்து கலந்து கொடுத்து தீயை அதிகப்படுத்தி இரண்டு நிமிடம் கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும். இப்பொழுது சுவையான கத்திரிக்காய் பொடி கறி தயார்.
இந்த கத்தரிக்காய் பொடி கறியை தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற கலவை சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை சிறப்பாக இருக்கும்.