10 நிமிடத்தில் தயாராகும் ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பச்சடி !

கத்திரிக்காய் வைத்து புதுமையாக ரெசிபி செய்ய விரும்புவர்களுக்கு இந்த ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பச்சடி மிகவும் உதவியாக இருக்கும். சூடான சாதம் முதல் இட்லி மற்றும் தோசை என அனைத்திற்கும் இந்த பச்சடி கச்சிதமான பொருத்தமாகவும் இருக்கும். வாங்க இந்த பச்சடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் மூன்று அல்லது நான்கு கத்தரிக்காய், நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அடுப்பில் வைத்து சுட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நெருப்பில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியின் தோல் மாறும் வரை நன்கு வாட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் காரத்திற்கு ஏற்ப ஐந்து காய்ந்த வத்தலையும் நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ளலாம். அடுத்து இதனுடன் ஒரு முழு பூண்டையும் தனியாக சுட்டு எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் எலுமிச்சை பல அளவுள்ள புளியை வெந்நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பத்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளலாம். நெருப்பில் நன்கு சுட்டு வைத்திருக்கும் கத்திரிக்காய் மற்றும் தக்காளியின் தோல் பகுதிகளை நீக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் நெருப்பில் சுட்ட காய்ந்த வத்தல், அதேபோல் நெருப்பில் வாட்டிய பூண்டு, அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதுவை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுதுவை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் நாம் சுட்டு எடுத்த கத்திரிக்காய், தக்காளி சேர்த்து கைகள் கொண்டு பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஊற வைத்திருக்கும் புளியை நன்கு கரைத்து புளி தண்ணீர் மற்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

அட இதுல கூட ரசம் செய்யலாமா? வாயை பிளக்க வைக்கும் சுவையில் பைன் ஆப்பிள் ரசம்!

இதை அடுத்து நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் கைகள் கொண்டு பிசைந்து கொள்ளலாம். இப்பொழுது சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பச்சடி தயார்.

மிகவும் எளிமையான முறையில் தயாராக இந்த பச்சடி சாதம் முதல் தோசைக்கு கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.