பொதுவாக அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு சைவ பிரியர்களால் பெரிதும் சாப்பிடப்படாத ஒன்றாக இருக்கும். இந்த முறை அசைவ மற்றும் சைவ பிரியர்கள் இருவருக்கும் கச்சிதமாக பொருந்தும் விதத்தில் ரெசிபி ஒன்றை பார்க்க போகிறோம். அருமையான பருப்பு சாதம் மற்றும் கருவாடு தொக்கு செய்து இரண்டு தரப்பு ரசிகர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தலாம் வாங்க.. எளிமையான முறையில் இந்த ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ…
முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கையளவு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கூடுதலாக பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வாசனைக்காக இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தேவைக்கேற்ப சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாடுகளை சேர்த்து எண்ணெயோடு வதக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இரண்டு தேக்கரண்டி தனி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் பச்சை வாசனை சென்று எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
தனி குழம்பு மிளகாய் தூள் இல்லாத பட்சத்தில் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும்வரை வதக்கி கொள்ள வேண்டும்.
இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு கலந்து மூடி போட்டு பத்து முதல் 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கருவாடு தொக்கு தயார்.
இப்பொழுது பருப்பு சோறு தயார் செய்து கொள்ளலாம். இதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து உறவைக்க வேண்டும். அதாவது முக்கால் கப் அரிசிக்கு அரை கப் உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும். இந்த முறை தோல் இருக்கும் கருப்பு உளுந்து சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.
அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவி சுத்தம் செய்து இதனுடன் கால் தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் கலந்து மூன்று அல்லது நான்கு விசில்கள் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.
இறுதியாக கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பருப்பு சோறு தயார். இந்த பருப்பு சோறு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணம் அடையக் கூடியதாகவும் இருக்கும்.
வாங்க விருந்து தயார். அருமையான கருவாடு தொக்கு பருப்பு சோறு நல்ல விடுமுறை நாட்களில் சிறப்பான உணவாக இந்த ரெசிபி இருக்கும்.