இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத கமகமக்கும் கருவாட்டு குழம்பு!

அசைவ பிரியர்களுக்கு கருவாடு மீது தனி பிரியம் தான். இந்த குழம்பு வைத்த முதல் நாளை விட அடுத்த நாள் மிகவும் ருசியாய் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இரண்டு நாட்களுக்கு மொத்தமாகவே இந்த குழம்பு வைத்து சாப்பிடும் அளவிற்கு சுவை அமிர்தமாக இருக்கும். அப்படி கமகமக்கும் வாசத்துடன் கருவாட்டுக் குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

கருவாட்டுக் குழம்பு செய்வதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே அரை கப் காய்ந்த மொச்சை பயிரை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைத்துக் கொள்ள வேண்டும். எட்டு மணி நேரம் கழித்து நாம் ஊற வைத்திருக்கும் மொச்சை பயிரை சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நின்று விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.

அதே நேரத்தில் ஒரு எலுமிச்சை பழ அளவு புளியை சூடான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்ததாக 100 கிராம் அளவு காய்ந்த நெத்திலி மீனை சூடான தண்ணீரில் சேர்த்து நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு கைப்பிடி அளவு தோல் உரித்த சின்ன வெங்காயம், நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழம், கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நந்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அகலமான ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் 10 பல் வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கலவையில் இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் நம் ஊற வைத்திருக்கும் புளி கரைசல், நீலவாக்கில் நறுக்கிய முருங்கக்காய், கத்தரிக்காய், நம் வேக வைத்திருக்கும் மொச்சை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

எப்பொழுதும் ஒரே மாதிரியான பால் பாயாசம், பருப்பு பாயாசம் சாப்பிட்டு சலித்து விட்டதா? வாங்க கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் ட்ரை பண்ணலாம்!
இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்நீரில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாடை இதில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் மீண்டும் ஒருமுறை கலந்து கொடுத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுமையான கம கமக்கும் வாசத்துடன் கருவாட்டு குழம்பு தயார்.