அசைவத்தில் என்னதான் விதவிதமாக சமைத்து சமைத்து சாப்பிட்டாலும் கருவாட்டிற்கு இணையாக எந்த உணவாலும் ஈடு கொடுக்க முடியாது. ஒரே மணக்கும் வாசத்தில் கருவாட்டு குழம்பு ஒன்று வைத்தால் போதும் மூன்று நாளைக்கு எந்த குழம்பு எந்த சமையலும் தேவையே படாது. இந்த ஒரு குழம்பு வைத்து தோசை, இட்லி, சாதம் என மூன்று வேலைக்கும் வைத்து சாப்பிடலாம். இந்த முறை கருவாடு வைத்து அருமையான சட்டி சாதம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் ஒரு பாத்திரத்தில் நமக்கு தேவையான கருவாடுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் . இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், கொதிக்கும் தண்ணீர் கலந்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் நான்கு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய 20 பல் வெள்ளைப் பூண்டு, கைப்பிடி அளவு புதினா, இரண்டாக கீறிய பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாடை கடாயில் சேர்த்து எண்ணெயோடு வதக்க வேண்டும். இப்படி வதக்கினால் குழம்பு கொதித்து வரும் நேரத்தில் கருவாடு உடையாமல் அப்படியே இருக்கும்.
அடுத்ததாக இதில் 150 கிராம் அளவுள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் நறுக்காமல் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். கண்ணாடி பதத்தில் வதங்கியதும் 200 கிராம் அளவுள்ள பொடியாக நறுக்கிய தக்காளி பழம் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கும் பொழுது அளவாக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் காரணத்தினால் அதற்கு ஏற்றார் போல் சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி மற்றும் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளலாம். தக்காளி நன்கு குலைவாக வதங்கியதும் இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
சுட சுட மண் சட்டியில் வறுத்து அரைத்த மட்டன் வறுவல் குழம்பு! கைப்பக்குவம் மாறாத ரெசிபி இதோ!
அடுத்ததாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு வற்றி தொக்கு பதத்திற்கு வரும்வரை விதமாக வதக்கி கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இதில் ஒரு கப் வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் அம்மா ஸ்டைல் கருவாட்டு சட்டி சாதம் தயார்.
இந்த சாதத்துடன் அப்பளம், முட்டை வறுவல் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். கருவாடு பிடிக்காது என சொல்பவர்கள் கூட ஒரு முறை இதை சாப்பிட்டால் போதும் மீண்டும் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கும்.