கார்த்திகை தீப திருநாள் அன்று இறைவனுக்கு அவல் பொரி படைப்பது வழக்கம். அப்படி அவல் செய்து படைக்கும் பொழுது இந்த மாதிரி சிவப்பு அவலை வைத்து புட்டு செய்து பாருங்கள். இந்த சிவப்பு அவலில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உடைய இந்த சிவப்பு அவல் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றலையும் உள்ளடக்கி உள்ளது. குறைந்த அளவிலான கலோரிகளை மட்டுமே உள்ளடக்கிய இந்த சிவப்பு அவல் உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த சிவப்பு அவல் ரத்த சோகையை நீக்கிட உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவி புரிகிறது. உடலை வலுவாக வைத்திருக்க அடிக்கடி உணவில் சிவப்பு அவலை சேர்த்துக் கொள்வது நல்லது. வாருங்கள் இந்த அவலை வைத்து எப்படி சுவையான அவல் புட்டு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பஞ்சு போன்ற மென்மையான அப்பம்… இந்த கார்த்திகை திருநாளுக்கு இப்படி செய்யுங்கள் இனிப்பு அப்பம்!
அவல் புட்டு செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு அவலை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பேனில் எண்ணெய், நெய் எதுவும் சேர்க்காமல் நாம் எடுத்து வைத்திருக்கும் அவலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நீண்ட நேரம் வறுத்து விடக்கூடாது. இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இதனை வறுத்து எடுக்கவும். இப்பொழுது இந்த அவல் சற்று ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் அரைத்து எடுத்த அவலை ஒரு பவுலின் சேர்த்து இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை தெளித்து கிளறி கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது தண்ணீரை லேசாக தெளித்து கிளறினால் போதுமானது. இப்பொழுது அதே பேனில் கால் கப் அளவிற்கு வெல்லம் இடித்து சேர்க்க வேண்டும். இதனுடன் இரண்டுமேசை கரண்டி அளவிற்கு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்கு கரைக்க வேண்டும். வெல்லம் கம்பி பதம் வர வேண்டிய அவசியம் இல்லை.
சுலபமாக செய்யலாம் திருக்கார்த்திகை பிரசாதம் பொரி உருண்டை…!
வெல்லம் கரைந்து லேசாக கொதி வந்தால் போதுமானது. இதில் சிறிதளவு ஏலக்காய் தூள் தூவி கொள்ள வேண்டும். வெள்ளம் இப்பொழுது கரைந்து கொதி வந்ததும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் அவலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அவலை வெல்லப்பாகுடன் சேர்த்து நன்கு கிளறியதும் நான்கு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுலபமான சுவையான சத்துக்கள் நிறைந்த சிவப்பு அவல் புட்டு தயாராகி விட்டது.