கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த நாள் முருகப் பெருமான் பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை மாத தீபத்திருநாள் அன்று கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபட்டு வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி அலங்கரித்து அந்த நாளை கொண்டாடுவார்கள். இந்த கார்த்திகை தீப கொண்டாட்டத்தன்று உங்கள் வீட்டில் இப்படி ரவை அப்பம் செய்து பாருங்கள். மென்மையான சுவையான இந்த அப்பத்தை நீங்கள் எளிமையாக செய்யலாம். வாருங்கள் இந்த ரவை அப்பம் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஆயுத பூஜை அன்று இப்படி தேங்காய் பால் பாயசம் செய்து பாருங்கள்!
ரவை அப்பம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு வெல்லத்தை சேர்க்கவும். இந்த வெல்லத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்ததும் இதனை தனியாக எடுத்து ஆறவிடலாம். இப்பொழுது ஒரு கப் அளவு ரவையை எடுத்துக் கொள்ளவும். இந்த ரவையை வறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ரவையில் நாம் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் வெல்லப்பாகை வடிகட்டி சேர்க்க வேண்டும். இதை கலந்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
ரவை வெல்லப்பாகில் ஊறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காய் சேர்த்து இதனை அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இதனை நன்கு அரைத்ததும் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இப்பொழுது அரைத்த மாவுடன் கால் கப் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, அரை டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள், ஒரு டீஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதிக கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் இதனை கரைக்கவும். தேவைப்பட்டால் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கரைத்த இந்த அப்ப மாவை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணையை சூடு செய்யவும். எண்ணெய் அதிக சூடாக இல்லாமல் மிதமான சூட்டில் இருக்கும் பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் அப்ப மாவை ஊற்றி எடுக்க வேண்டும். அப்பத்தை திருப்பி விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து விடலாம்.
அவ்வளவுதான் சுவையான மிருதுவான ரவை அப்பம் தயாராகி விட்டது.