வீட்டில் சில சமயம் எந்த காயும் இல்லாத பொழுது என்ன குழம்பு சமைப்பது என்ற குழப்பம் ஏற்படும். அந்த நேரத்தில் காய்கறிகள் இல்லாமல் சமைக்கவும் வேண்டும், அந்த சமையல் அனைவருக்கும் பிடித்த விதத்திலும் அமைய வேண்டும். அப்படிப்பட்ட சமயங்களில் வெங்காயம் தக்காளி என எந்த காயும் இல்லாமல் அருமையான காரக்குழம்பு ஒன்று செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த குழம்பு செய்வதற்கு முதலில் 20 பல் வெள்ளை பூண்டு, தோள்களை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு உரலில் சேர்த்து ஒன்று இரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
கடலை பருப்பு பொன்னிறமாக மாறியதும் இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். கருவேப்பிலை நன்கு வதங்கி வாசனை வந்ததும் நாம் தட்டி வைத்திருக்கும் வெள்ளைப்பூண்டு வை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெள்ளை பூண்டுவின் பச்சை வாசனை செல்லும் வரை நன்கு வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை அடக்கிக் கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா கொதித்து வரும் வரை மிதமான தீயில் கிளற வேண்டும். மசாலா குறைந்தது ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கடாயில் ஒரு கப் கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
தயிர் சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்ததும் மீண்டும் இதமான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து கடாய் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் காரக்குழம்பு தயார்.
இறுதியாக கைப்பிடி அளவு மல்லி இலைகளை நறுக்கி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான காய்கறி இல்லாத காரக்குழம்பு தயார். சூடான சாதம், தோசைக்கு இந்த குழம்பு கச்சிதமான பொருத்தமாக இருக்கும். காய்கறி இல்லாத அவசர சமயங்களில் இந்த மாதிரி குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.