இட்லி மாவு இல்லாத சமயங்களில் கோதுமை தோசைக்கு பதிலாக சுவையான மற்றும் ஹெல்த்தியான தோசை ரெசிபி!

தோசை பிரியர்களுக்கு இட்லி மாவு இல்லாத சமயங்களில் தோசை செய்வது கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. அந்த மாதிரி சமயங்களில் பெரும்பாலான வீடுகளில் இட்லி மாவிற்கு பதிலாக கோதுமை மாவு வைத்து அடை போல தோசை செய்வது வழக்கமான ஒன்று. . ஆனால் இந்த தோசை பலருக்கு பிடிப்பதாக இருப்பதில்லை. இந்த முறை சற்று வித்தியாசமாக சுவை கூடுதலாக தோசை செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அவல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவல் சிறிது நேரம் ஊறிய பிறகு தண்ணீரில் இருந்து பிரித்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

முதலில் ஒன்றரை கப் அளவு கடலை மாவு, அடுத்ததாக ஒரு கப் ஊறவைத்த அவல், கால் கப் ரவை, ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மாவில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மாவு கட்டியாக இருக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் தண்ணீர் கலந்து கொள்ளலாம். இப்பொழுது தோசை மாவு தயார். இந்த தோசை மாவில் நம் விருப்பத்திற்கு ஏற்ப தேங்காய் துருவல் அல்லது கேரட் துருவல் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

அரிசி மற்றும் பருப்பு வைத்து கமகமக்கும் வாசத்தில் அருமையான பருப்பு சாதம்!

இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு படுத்தி மாவை பதமாக பெரிய தோசையாக சேர்த்து பரப்பிக் கொள்ளலாம். தாராளமாக நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் ஹெல்தியான தோசை தயார்.

இந்த தோசைக்கு நல்ல காரமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது பருப்பு துவையல் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.