பொதுவாக இடியாப்பம் ஆப்பம் இவற்றிற்கு கடலை கறி வைத்து சாப்பிடுவது வழக்கம். அப்படி வைக்கப்படும் கடலை கறி பெரும்பாலும் கொண்டைக்கடலை வைத்து சமைக்கப்படுவது வழக்கம். இந்த முறை சற்று மாறுதலாக கொண்டைக்கடலைக்கு பதிலாக வேர்க்கடலை வைத்து காரசாரமான சுவையான கடலைக்கறி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் தேவையான அளவு பச்சை வேர்க்கடலையை குக்கரில் சேர்த்து தண்ணீர் கலந்து மூடி போட்டு 4 விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் தோள் பகுதிகளை நீக்கி வேர்க்கடலையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு சிறிய துண்டு இஞ்சி, நான்கு பல் வெள்ளை பூண்டு, பத்து முந்திரி பருப்பு, ஒரு சிறிய துண்டு பட்டை, அரை தேக்கரண்டி சோம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
தக்காளி பாதியாக வதங்கி மசிந்து வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்படியும் போண்டா செய்யலாமா…. வாங்க புதுவிதமான போண்டா ரெசிபி!
மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். வேர்க்கடலை சேர்த்த பிறகு ஒரு நிமிடம் மசாலாவோடு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக நாம் அரைத்த மசாலா தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ளலாம். அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வேர்கடலை கறி தயார்.