அருமையான தீபாவளி பலகாரம் 10 நிமிடத்தில் தயார்! மினி ஜிலேபி செய்வதற்கான ரெசிபி இதோ…

இன்னும் சில நாட்களில் ஆண்டுக்கு ஆண்டு விமர்சையாக கொண்டாடப்படும் விசேஷ நாளில் ஒன்றாக தீபாவளி வரவுள்ளது. தீபாவளி என்றாலே நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது பலகாரங்கள் தான். கடைகளில் பலகாரங்கள் வாங்காமல் வீட்டில் கை பக்குவத்தில் செய்யப்படும் பலகாரங்களுக்கு தனி சுவையும் மதிப்பும் அதிகம் தான். இந்த முறை நம் வீட்டிலேயே சின்ன சின்னதாக ஜிலேபி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. இந்த ரெசிபியை பயன்படுத்தி எளிமையான முறையில் விரைவாக ஜிலேபி செய்து முடித்து விடலாம்.

முதலில் ஒரு கப் வெள்ளை உளுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை நன்கு சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம்.

தண்ணீர் சேர்க்காமல் வடை பதத்திற்கு நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவை இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் இரண்டு தேக்கரண்டி கான்பிளவர் மாவு, இரண்டு முதல் மூன்று சிட்டிகை ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

நாம் மாவு தயார் செய்யும் பொழுது தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை நன்கு கெட்டியாக கலந்து கொண்டால் போதுமானது.. அடுத்ததாக சீனி பாகு தயார் செய்ய வேண்டும். இதற்கு ஒரு கப் சர்க்கரை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதற்கு ஒரு கப் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

சர்க்கரை பாகு நன்கு கொதித்து ஒரு கம்பி பதம் வந்தால் போதுமானது. சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு, இரண்டு சிட்டிகை ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் சர்க்கரை பாகில் வாசனைக்காக ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம்.

இப்பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை ஒரு பாலிதீன் பையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முக்கோண வடிவில் அதை மாற்றி அதன் நுனியில் சிறிய துளை போட்டு மாவை எண்ணெய் சூடு படுத்தி வைத்திருக்கும் கடாயில் வட்ட வடிவில் பிழிந்து கொள்ள வேண்டும். அதாவது ஜிலேபி போல அடுக்கடுக்காக வட்ட வடிவில் பிழிய வேண்டும்.

ஜில்லுனு இருக்கும் இந்த கால நிலைக்கு சூடாக பன்னீர் கட்லெட் சாப்பிடலாமா! எளிமையான ரெசிபி இதோ..

நாம் இந்த முறை தயார் செய்வது மினி ஜிலேபி என்ற காரணத்தினால் இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் சுற்றினால் போதுமானது. எண்ணையை மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் முக்கால் பாகம் வேகம் வரை பொறித்து எடுக்க வேண்டும்.

இப்பொழுது நாம் பொரித்து வைத்திருக்கும் ஜிலேபியை தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகு சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரம் ஜிலேபி சர்க்கரை பாகில் மூழ்கி இருக்க வேண்டும். இப்பொழுது அருமையான மினி ஜிலேபி தயார்.