திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு போட்டி போடும் சுவையின் ஜவ்வரிசி அல்வா!

அல்வா என்றாலே பலரின் மனதிற்கு நினைவிற்கு வருவது இருட்டுக்கடை அல்வா தான். வாயில் வைத்த உடன் கரையும் அல்வாவின் சுவைக்கு அனைவரும் அடிமைகள். அந்த இருட்டுக்கடை அல்வாவின் அதே சுவையில் நம் வீட்டிலேயே ஜவ்வரிசி வைத்து எளிமையான முறையில் தித்திப்பான அல்வா செய்யலாம் வாங்க…..

இந்த ஜவ்வரிசி அல்வா செய்வதற்கு ஒரு கப் மாவு ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து விட்டு ஒரு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

3 மணி நேரம் கழித்து ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியை ஊற வைத்திருக்கும் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு ஒன்று மற்றும் முக்கால் கப் வெல்லம் என்பது கணக்கு.

அதன்படி வெல்லம் சேர்த்து அரை கப் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். இப்பொழுது மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பத்து முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அந்த நெய்யில் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் ஜவ்வரிசி மாவை சிறிது சிறிதாக கலந்து கட்டிகள் விழாத வண்ணம் சேர்க்க வேண்டும். மொத்தமாக சேர்க்கும் பொழுது கட்டிகள் விழ வாய்ப்புள்ளதால் விடாமல் கிளறிக் கொண்டே மாவை கலக்க வேண்டும்.

திருநெல்வேலி ஸ்பெஷல் மாப்பிள்ளை விருந்து உளுந்து சோறு , மட்டன் கறிக்குழம்பு! அசத்தலான ரெசிபி இதோ…

தொடர்ந்து பத்து நிமிடம் மிதமான தீயில் அல்வாவை கலந்து கொடுக்க வேண்டும். அல்வா கெட்டியாக இறுகி வரும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.

அல்வா கடாயில் ஒட்டாமல் நன்கு உருண்டு திரண்டு வந்தால் தற்பொழுது ஜவ்வரிசி அல்வா தயார். இறுதியாக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், வருத்த முந்திரி சேர்த்து இறக்கினால் வாசமாக இருக்கும்.