உங்கள் குளிர்சாதன பெட்டியை திறந்தால் துர்நாற்றம் வருகிறதா??? அப்போ இந்த டிப்ஸை தவறாமல் ஃபாலோ பண்ணுங்க…!

குளிர்சாதன பெட்டி உணவுப்பொருட்களை பாதுகாப்பாக நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கும் ஒரு கருவியாக மட்டுமில்லாமல் பல இடங்களில் தூக்கிப்போட மனம் வைராத உணவு பண்டங்களை வைக்கும் கிடங்காகவும் மாறிவிடுகிறது. இதனால் சில வீடுகளில் குளிர்சாதன பெட்டியை திறந்தாலே கடுமையான துர்நாற்றம் வீசும். சரிவர குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்யாமல் இருத்தல் முக்கிய காரணமாக இருந்தாலும் சுத்தம் செய்தாலும் சில நேரங்களில் இது போன்ற துர்நாற்றம் வரலாம். அப்படி உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றம் வந்தால் கவலை வேண்டாம். இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பாருங்கள்.

1. பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா துர்நாற்றத்தை நீக்குவதற்கு மிகச்சிறந்த கருவியாகும். ஒரு சிறிய பவுலை எடுத்து அதில் பேக்கிங் சோடாவை நிரப்பி இதனை மூடாமல் குளிர்சாதன பெட்டியின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். பேக்கிங் சோடா துர்நாற்றத்தை உட் கிரகித்து சிறிது நேரத்திலேயே அதனை விரட்டி அடிப்பதை நாம் உணர முடியும்.

2. வினிகர்:

வினிகரும் குளிர்சாதன பெட்டியை தன்னுடைய தனித்துவமான மணத்தால் துர்நாற்றத்தில் இருந்து காத்திடுகிறது. குறிப்பாக நடுத்தர அளவிலான குளிர்சாதன பெட்டிகளுக்கு வினிகர் ஒரு நல்ல தேர்வு.

3. உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கை வட்ட வடிவில் நறுக்கி இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். உருளைக்கிழங்கு துர்நாற்றத்தை உட்கிரகித்து சிறிது நேரத்தில் துர்நாற்றம் இல்லாதபடி செய்துவிடும். இந்த உருளைக்கிழங்கை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்.

4. எலுமிச்சை மற்றும் கிராம்பு:

ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடலாம். அல்லது அதில் சில கிராம்புகளை சொருகி குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் துர்நாற்றத்தை எளிமையாக விரட்டி அடிக்க முடியும்.

காய்கறிகளை முதல் நாள் இரவே நறுக்கி மறுநாள் சமையலுக்கு பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

5. காபி:

ஒரு சிறிய பௌலில் காபித்தூள் நிரப்பி அதனை மூடாமல் குளிர்சாதன பெட்டியின் மூலையில் வைத்து விடுங்கள். சிறிது நேரத்தில் காபியின் மணம் துர்நாற்றத்தை விரட்டிவிடும்.

6. வெனிலா எக்ஸ்ட்ராக்ட்:

வெனிலா எக்ஸ்ட்ராக்டை ஒரு சிறிய பஞ்சு உருண்டையில் நனைத்து அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால் போதும் இதன் நறுமணம் துர்நாற்றத்தை விரட்டி அடித்து விடும்.