இனி கடைகளில் வாங்க வேண்டாம்.. மொறு மொறு ஓமப்பொடி இப்படி செய்து பாருங்கள்…!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்நாக்ஸ் வகைகள் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். மாலை வேளையில் மொறு மொறுவென்று ஏதேனும் ஒரு சிற்றுண்டியை குறிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றலாம். இதற்காக கடைகளில் வாங்கும் உணவுகளை உண்பதை விட வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது. வீட்டிலேயே மொறுமொறுவென்று எளிமையாக ஓமப்பொடி செய்து சாப்பிடலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

ஆம் இதை செய்வது கடினமான வேலை அல்ல மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இந்த ஓமப் பொடியை வீட்டிலேயே செய்துவிடலாம் இதற்கு அதிகமான பொருட்கள் தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மிக சுலபமாக செய்யலாம். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இதனை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் தீமை தராது.

இந்த ஓமப்பொடி செய்வதற்கு ஒரு மேசைக் கரண்டி அளவு ஓமத்தை எடுத்துக்கொள்ளவும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஓமத்தை நன்கு பொடித்த பிறகு இதனுடன் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். அரைத்த பிறகு இதனை வடிகட்டி தனியாக வைத்து விடலாம்.

இப்பொழுது ஒரு பவுலில் ஒரு கப் அளவு கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்த ஓமம் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

தயார் செய்து வைத்திருக்கும் தண்ணீரில் கால் கப் அளவு ஊற்றினாலே போதுமானது. அனைத்தையும் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாவு அதிக தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் மாவை ஒரு இடியாப்ப உரலில் போட்டுக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்துக் கொள்ள வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து நம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை பிழிந்து விட வேண்டும். இதனை அதிக நேரம் பொறிக்க தேவையில்லை. பிழிந்து விட்ட சில நிமிடங்களிலேயே பொரிந்து வந்திருக்கும் பிறகு இதனை எடுத்து விடலாம்.

அனைத்து மாவையும் முழுமையாக பிழிந்து எடுத்த பிறகு அதே எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும். நாம் ஏற்கனவே பொரித்து எடுத்ததை இப்பொழுது பொடியாக உடைத்து கொள்ளலாம். அதனுடன் பொரித்த கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொண்டால் அட்டகாசமான மொறுமொறு ஓமப்பொடி வீட்டிலேயே தயாராகி விட்டது.