மழைக்காலத்திற்கு ஏற்ற சூடான மசாலா டீ…! அடுத்த முறை இப்படி டீ போடுங்க…!

தேநீர் குடிப்பது பலருக்கும் புத்துணர்ச்சி அளிக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. காலை கண்விழித்ததும் தேநீர் குடித்தால் தான் அந்த நாளே தொடங்கியது போல் இருக்கும். அதே போல் அலுவலகத்திலும் வேலை பளுவுக்கு இடையில் ஒரு தேநீரை குடித்தால் சுறுசுறுப்பாக இருப்பது போல் உணர்வார்கள். இந்த தேநீர் செய்யும் முறையை பலரும் பலவித பாணிகளில் செய்வார்கள். சாதாரண தேநீர் தொடங்கி இஞ்சி தேநீர், லெமன் தேநீர், செம்பருத்தி தேநீர், மசாலா தேநீர் என தேநீர்களில் பல வகைகள் உண்டு. இப்பொழுது தொடங்கி இருக்கும் மழைக்காலத்தை எப்படி சுவையான மசாலா டீயுடன் ரசித்து மகிழலாம் என்பதை பார்ப்போம்.

மசாலா தேநீர் செய்வதற்கு முதலில் இடிக்கின்ற உரலில் ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, 4 ஏலக்காய், 6 மிளகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். மிளகு சேர்ப்பதால் டீ குடிக்கும் பொழுது சுருக்கென்ற சுவையுடன் நன்றாக இருக்கும். இந்த மசாலாக்களை மொத்தமாக இடித்தும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்பொழுது இடித்து செய்தால் பிரஷ்ஷாக கூடுதல் நறுமணமோடு இருக்கும். இவற்றை தனியாக வைத்து விடுங்கள். இப்பொழுது அதே உரலில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அதையும் நன்றாக தட்டி கொள்ள வேண்டும்.

இப்பொழுது டீ போடும் பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்க்கவும். இந்த தண்ணீரில் நாம் எடுத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இவற்றோடு ஒரு மேசை கரண்டி அளவிற்கு டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இந்த மசாலாக்கள் மற்றும் டீ தூள் மூன்று நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். இவை நன்கு கொதித்ததும் இதனோடு ஒரு கப் அளவு பால் சேர்த்து அதையும் நன்றாக கொதிக்க விட வேண்டும். உங்களுக்கு தேவையான அளவு இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம். இரண்டிலிருந்து மூன்று ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து பால் நன்கு பொங்கி வந்ததும். இதனை வடிகட்டி விடலாம் நன்கு நுரை வரும்படி ஆற்றி சூடாக பருகினால் அத்தனை சுவையாக இருக்கும்.

அவ்வளவுதான் சுவையான மசாலா டீ தயார்!