வடகறி தென்னிந்திய உணவகங்களில் மிகப் பிரபலமான ஒரு உணவு வகையாகும். இது தோசை இட்லி போன்ற உணவு வகைகளுடன் அட்டகாசமாக இருக்கும். பெரும்பாலும் ஹோட்டல்களில் மசாலா வடைகளை உதிர்த்து தக்காளி, வெங்காய மசாலாக்கள் சேர்த்து இந்த வடகறியை செய்வார்கள். ஹோட்டல்களில் சுவையாக இருக்கும் இந்த வடகறியை நாமும் வீட்டிலேயே அதே சுவையுடன் செய்ய முடியும்.
இந்த வடகறி செய்வதற்கு ஒரு கப் அளவு கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கடலைப்பருப்பு நன்கு ஊறிய பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் இரண்டு ஸ்பூன் சோம்பு, 4 வரமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை மைய அரைத்து விடக்கூடாது சற்று கொரகொரப்பாக வடைக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேகவைத்தும் இந்த வடகறியை செய்யலாம். இப்பொழுது பொரித்து எடுத்த வடைகளை நன்கு உதிர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் செய்யும் மசாலா இதில் நன்கு இறங்கி நல்ல சுவையுடன் இருக்கும்.
இப்பொழுது கடாயில் இரண்டு மேஜை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை இதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இரண்டு பச்சை மிளகாய்களை கீறி சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். மசாலாக்கள் கரிந்து விடாமல் இருக்க சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு தக்காளிகளை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பாரம்பரிய சுவையில் அட்டகாசமான கருணைக்கிழங்கு குழம்பு!
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதனை நன்கு கொதிக்க விட வேண்டும். இரண்டு மேசை கரண்டி அளவு தேங்காய் அரைத்து அந்த தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நாம் ஏற்கனவே உதிர்த்து வைத்திருக்கும் வடைகளை இதில் சேர்த்து நன்கு கிளறி விடவும். இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறலாம்.
அவ்வளவுதான் இட்லி தோசைக்கு அட்டகாசமான வடகறி ஹோட்டல் சுவையில் தயாராகி விட்டது.