முக்கியமான சிறு தானிய வகைகளில் ஒன்று திணை அரிசி. திணை அரிசியில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளது. திணை அரிசி இதயம் சீராக செயல்பட உதவி புரிகிறது. மூளை ஆரோக்கியம் வலுப்பெற திணை உணவு துணை புரிகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு திணை அரிசி என்று சொல்லலாம். உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற நாம் திணை உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தனை நன்மைகள் நிறைந்த திணை அரிசி வைத்து எப்படி சுவையான தினை உப்புமா செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
காலை உணவுக்கு சத்தான ரெசிபி.. ஈஸியா செய்யலாம் ஓட்ஸ் தோசை…!
திணை உப்புமா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு திணையை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த திணை அரிசியை ஐந்து முறை நன்றாக தண்ணீரில் அலசி எடுக்க வேண்டும். இப்பொழுது இதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். குறைந்தது அரை மணி நேரம் இந்த திணை தண்ணீரில் நன்கு ஊற வேண்டும். பிறகு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இவை சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இவற்றைத் தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் பொழுதே ஒரு துண்டு இஞ்சி பொடி பொடியாக நறுக்கி சேர்த்து அதையும் நன்கு பச்சை வாசனை போகும் படி வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் ஒரு சிறிய அளவிலான தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் இதில் காய்கறிகள் சேர்க்கலாம். எளிதில் வேகக்கூடிய காய்கறிகளை இந்த உப்புமாவிற்கு சேர்த்துக் கொண்டால் காலை உணவு தயாரிக்கும் நேரம் மிச்சமாகும். எனவே இப்பொழுது நாம் இதில் அரை கப் அளவிற்கு பீன்ஸ், அரைக்கப் கேரட், மற்றும் அரை கப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
காய்கறிகளை வதக்கிய பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் விட்டு இதனை குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு காய்கறிகள் வெந்ததும் இதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் ஏற்கனவே ஊற வைத்திருக்கும் திணை அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது இந்த உப்புமாவை மூடி வைத்து 15 நிமிடங்கள் வேக விடவும். குறைவான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வெந்ததும் மூடியை திறந்து பார்க்க உப்புமா தயாராகி இருக்கும். அவ்வளவுதான் ஆரோக்கியமான தினை உப்மா தயாராகி விட்டது. இனி உங்கள் காலை பொழுதை ஆரோக்கியமாக தொடங்குங்கள்.