சிமிலி உருண்டை என்பது கிராமங்களில் பாரம்பரியமாக செய்து வரக்கூடிய ஒரு சிற்றுண்டி வகையாகும். கேழ்வரகு மாவை அடை போல தட்டி பிறகு அதனை இடித்து மாவாக்கி செய்யப்படும் இந்த சிமிலி உருண்டை அட்டகாசமாக சுவையுடன் இருப்பதோடு சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. ராகியில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இந்த சிமிலி உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும் நிச்சயம் உடல் வலுப்பெறுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். வாருங்கள் இந்த சிமிலி உருண்டை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ராகி சிமிலி உருண்டை செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் ஒரு கப் அளவு வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை வறுத்த வேர்க்கடலை என்றால் நேரடியாக தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளலாம். அதன் தோலை நீக்கி தனியாக வைத்து விடவும்.
ஒருமுறை மேகியை இப்படி முட்டை சேர்த்து செய்து பாருங்கள்.. சூப்பரான எக் மேகி…!
இப்பொழுது ஒரு பவுலில் இரண்டு கப் அளவு ராகி மாவை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து இதனை அடை மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடைமாவிற்கு சப்பாத்தி போன்றும் இல்லாமல் அதிக தண்ணீர் ஆகவும் இல்லாமல் பிசைய வேண்டும்.
பிசைந்த இந்த ராகி மாவை நான்கிலிருந்து ஐந்து உருண்டைகளாக உருட்டி இதனை அடை போல தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தோசை கல்லை சூடு செய்து அடை போல தட்டி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து இரண்டு புறமும் நன்கு வெந்ததும் இந்த அடையை எடுக்க வேண்டும்.
இப்படியே அனைத்து மாவிலும் அடை சுட்டு எடுத்து வைத்து விடவும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை லேசாக பொடித்து எடுத்தால் போதுமானது.
வேர்க்கடலையை பொடித்து எடுத்த பிறகு நாம் தட்டி வைத்திருக்கும் அடை மாவை சிறுசிறு துண்டுகளாக உடைத்து அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்ஸி ஜாரில் ஒன்றரை கப் அளவு துருவிய வெல்லம் சேர்த்து அதையும் அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பவுலில் நாம் அரைத்து வைத்திருக்கும் வெல்லம், ராகி அடை மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெள்ளை எள்ளு மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
வெல்லம் இலகி தண்ணீர் விடும் என்பதால் இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கையின் சூட்டிற்கு வெல்லம் இளகி வந்து விடும் அதில் விடும் தண்ணீரே போதுமானது. இப்பொழுது இந்த மாவை நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு வலு சேர்க்கும் ராகி வைத்து சுவையான ராகி இட்லி..!
பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சிமிலி உருண்டை கிராமத்து ஸ்டைலில் தயாராகி விட்டது. இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் வகையில் சுவை நிறைந்ததாக இருக்கும்.