டோக்ளா சாப்பிட வேண்டும் என்பதற்காக நாம் குஜராத் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் டோக்ளா செய்யலாம் வாங்க. இனிப்பு மற்றும் உப்பு கலந்த சுவையில் அருமையான டோக்ளா செய்வதற்கான ரெசிபி இதோ!
டோக்ளா செய்வதற்கு முதலில் ஒரு கப் கடலை மாவு வை அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி சக்கரை, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து முதலில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். கெட்டியாக இல்லாமல் மாவு ஓரளவு பக்குவமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மாவை நன்கு கரைத்தபின் ஒரு தேக்கரண்டி ஈனோ சால்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஈனோ சால்ட் சேர்த்தால் மட்டுமே மாவு நன்கு புதைத்து பொங்கி வரும். அதன் பின் இந்த மாவை அடிகனமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். முதலில் அடிகனமான பாத்திரத்தில் நெய் தடவிக் கொண்டு அதன் பின் இந்த கரைத்து வைத்திருக்கும் மாவை நாம் அதில் ஊற்றிக் கொள்ளலாம்.
இந்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, இரண்டு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி சர்க்கரை, பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து கொள்ள வேண்டும்.
கோடை காலத்திலும் சளி தொல்லையா? அருமையான வீட்டு மருந்து வெற்றிலை பூண்டு சாதம்…
அதன் பின் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இட்லி பாத்திரத்தில் மாவு நன்கு வந்ததும் நம் விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். நறுக்கிய இந்த டோக்ளாக்களை ஒரு அகலமான தட்டில் மாற்றி அதன் மேல் நம் தாளித்து வைத்திருக்கும் கலவையை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இறுதியாக அதன் மேல் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து பரிமாறினால் இனிப்பு மற்றும் காரத்துடன் டோக்ளா தயார்.