சப்பாத்திக்கு சால்னா வைத்து சாப்பிடுவது போல பணியாரம், ஆப்பம், இடியாப்பம் இவற்றிற்கு காரசாரமாக சால்னா வைத்து சாப்பிடும் பொழுது வயிறு நன்கு நிரம்பி திருப்தியை கொடுக்கும். சப்பாத்தி இல்லாமல் மற்ற பலகாரங்களுக்கு பரிமாறப்படும் சால்னா சப்பாத்தி குருமா போல இல்லாமல் சற்று வித்தியாசமாக செய்யும் பொழுது சுவை கூடுதலாகவே இருக்கும். இந்த முறை பணியாரம், ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றிற்கு ஏற்ற பொருத்தமாக அமையும் பச்சை சால்னா செய்வதற்கான ரெசிபியை தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
இந்த சால்னா செய்வதற்கு முதலில் மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, ஐந்து பல் வெள்ளை பூண்டு, கைப்பிடி அளவு புதினா இலை, கைப்பிடி அளவு மல்லி இலை, ஒரு சிறிய துண்டு இஞ்சி, கைப்பிடி அளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தேக்கரண்டி தேங்காய்த்துருவல், இரண்டு தேக்கரண்டி பொறிகடலை, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், காரத்திற்காக இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும்.
மசாலா அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி கறி மசாலா தூள், ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தூள் சேர்த்து எண்ணெயோடு நன்கு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து வதக்க வேண்டும். கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் தண்ணீர் கலந்து குருமாவிற்கு தேவையான அளவு உப்பு கலந்து நன்கு கிளற வேண்டும். அடுத்ததாக குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விஷல்கள் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.
இரண்டு விஷயங்கள் வந்து குக்கரின் அழுத்தம் குறைந்ததும் கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி கிளறி பரிமாறினால் சுவையான பச்சை சால்னா தயார். இந்த சால்னா செய்வதற்கு காய்கறிகள் பெரிதாக பயன்படாது. ஒரு பல்லாரி மட்டுமே போதுமானதாக இருப்பதால் எளிமையான முறையில் வீட்டில் நொடியும் தயார் செய்து விட முடியும்.