ரோட்டு கடை ஸ்டைல் ஸ்பெஷல் கோபி நூடுல்ஸ்! அசத்தல் ரெசிபி இதோ…

மாலை நேரங்களில் ரோட்டு ஓர கடைகளில் மட்டுமே சில வகையான ஸ்னாக்ஸ் வகைகளுக்கு நம்மில் பலரும் அடிமையாக இருந்து வருகின்றனர். அதிலும் நூடில்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம். ரெஸ்டாரண்டை மிஞ்சும் சுவையில் காரசாரமாக சிவப்பு நிறத்தில் உதிரி உதிரியாக இருக்கும் அந்த நூடுல்ஸ்க்கு ரசிகர் பட்டாளமே அதிகம் தான். வாங்க இந்த முறை ரோட்டு கடை ஸ்டைலில் ஸ்பெஷல் கோபி நூடுல்ஸ் நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபி விளக்கத்தை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் ஒரு காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அப்படியே ஓரமாக வைத்துவிடலாம்.. பத்து நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி கான்பிளவர் மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு, தனி மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, தனியாத்தூள் ஒரு தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள் ஒரு தேக்கரண்டி, சீரகத்தூள் அரை தேக்கரண்டி, அரை தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு, கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாக மாவு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இந்த காலிஃப்ளவரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மிக அகலமான கடாய் ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய ஐந்து பல் வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பத்து நிமிடத்தில் பருப்பு இல்லாமல் அல்டிமேட் சுவையின் சாம்பார் ரெசிபி!

காய்கறிகள் வதக்கும்போது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள், ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், இரண்டு தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதை அடுத்து நாம் வேகவைத்து தயார் செய்து வைத்திருக்கும் நூடுல்ஸை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நூடுல்ஸ் சேர்த்த பிறகு இரண்டு தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நெருப்பை சற்று அதிகப்படுத்தி வைத்துக் கொண்டு கிளற வேண்டும்.

இறுதியாக நாம் முதலில் குறித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை நூடுல்ஸ் உடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான ரோட்டு கடை கோபி நூடுல்ஸ் தயார்.