வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் அட்டகாசமான சுவையில் பூண்டு மல்லி சிக்கன் ரெசிபி!

அசைவம் சமைப்பதற்கு முக்கியமாக வெங்காயம் மற்றும் தக்காளி கண்டிப்பாக தேவை. வெங்காயத்தை அரைத்து மசாலாவாகவோ அல்லது சின்ன வெங்காயத்தை நறுக்கி வதக்கி அதில் தக்காளி சேர்த்து சமைக்கும் பொழுது மட்டுமே குழம்பின் சுவை அருமையாக இருக்கும். ஆனால் இந்த முறை வெங்காயம் தக்காளி என எதுவும் இல்லாமல் சிக்கன் வைத்து அருமையான மற்றும் எளிமையான பூண்டுமல்லி சிக்கன் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு சாய்ந்த வத்தல் சேர்த்து வதக்க வேண்டும். காய்ந்த வத்தல் வதக்கும் பொழுது வத்தல் தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது வத்தல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கினால் போதுமானது.

இதை அடுத்து பொடியாக நறுக்கிய 10 பல் வெள்ளைப் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இந்த நேரத்தில் நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்த அரை கிலோ சிக்கனை சேர்த்துக் கொள்ளலாம்.

குறைந்தது 5 முதல் 10 நிமிடம் சிக்கன் இஞ்சி, பூண்டு மற்றும் எண்ணெயோடு சேர்த்து நன்கு வதங்க வேண்டும். சிக்கனை எண்ணெயோடு திரட்டும் நேரத்தில் அரை தேக்கரண்டி கல்லுப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

10 நிமிடம் கழித்து மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக இரண்டு தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, இரண்டு தேக்கரண்டி க்ரீன் சில்லி சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி! காரசாரமான ரெசிபி இதோ!

மசாலா சேர்த்த பிறகு கைப்பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து கிளற வேண்டும். கொத்தமல்லி கண்டிப்பாக இந்த சிக்கன் கிரேவியில் சேர்க்க வேண்டும். கொத்தமல்லி சேர்க்கும் பொழுது மட்டுமே முழுமையான சுவை மற்றும் வாசனை கிடைக்கும்.

அடுத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து சிக்கனை மூடி போட்டு வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சிக்கன் நல்ல முறையில் வெந்து இருக்கும். மீண்டும் ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளரி இறக்கிக் கொள்ளலாம்.

சிக்கன் தயாராக மாறியதும் அரை எலுமிச்சை பழ அளவு சாறு பிழிந்து சிக்கனுடன் ஒருமுறை கலந்து கொண்டு பரிமாறினால் சுவை அமிர்தமாக இருக்கும். இப்பொழுது சுவையான பூண்டு மல்லி சிக்கன் தொக்கு தயார். வெங்காயம் மற்றும் தக்காளி இல்லாத சமயங்களில் இது போன்ற சிக்கன் ரெசிபி செய்து வீட்டில் உள்ளவர்களை எளிமையாக அசத்தலாம் வாங்க.