மீன் வைத்து எப்போதும் ஒரே மாதிரியாக குழம்பு, தொக்கு, கிரேவி என செய்யாமல் சற்று புது விதமான ரெசிபிகளை பயன்படுத்தி வித்தியாசமாக சமைத்துக் கொடுக்கும் பொழுது சுவை கூடுதலாகவும் சாப்பிட மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த முறை அருமையான மீன் வைத்து பொரித்த மீன் தொக்கு அல்லது கிரேவி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் மசாலா தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான தட்டில் 2 தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் கலந்து மசாலாவை நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை சேர்த்து நன்கு மசாலாக்களை தடவி ஊற வைத்துக் கொள்ளலாம்.
அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரை தேக்கரண்டி கல்லுப்பு, மூன்று தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளலாம்.இஞ்சி மற்றும் பூண்டு விழுதுவின் பச்சை வாசனை அடங்கியதும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளிப் பழம் சேர்த்து மசியும் வரை வதக்க வேண்டும். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் மூன்று தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள், ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை நன்கு மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். இந்த நேரத்தில் மசாலா தடவி வைத்திருக்கும் மீன்களை பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.
வெஜிடபிள் வெள்ளை குருமாவுடன் போட்டி போடும் சுவையில் சிக்கன் வெள்ளை குருமா!
ஒரு தோசை கல்லில் தாராளமாக எண்ணெய் சேர்த்து மசாலா தடவி வைத்திருக்கும் மீனை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பொன்னிறமாக இரு பக்கம் வெந்து வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். அதன் பின் பொறித்த மீன்களை தனியாக எடுத்து வைத்து விடலாம்.
இப்பொழுது குழம்பு கொதித்து கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் நாம் பொரித்து வைத்திருக்கும் மீன்களை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மீன் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை பிரட்டி சேர்த்து கலந்து கொள்ளலாம். இறுதியாக அடுப்பை அணைத்து விட வேண்டும்.