பஞ்சு போல மிருதுவான இட்லிக்கு… திருநெல்வேலி ஸ்பெஷல் கார எள்ளு பொடி!

பஞ்சு போல மிருதுவாக இட்லி புசுபுசுவென வைத்தாலும் அதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியாக சட்னி, சாம்பார் என வைப்பது சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தி விடும். ஒரே தேங்காய் சட்னி தானா, தக்காளி சட்னி தானா என கேள்வி கேட்கும் நபர்களுக்காக காரசாரமாக திருநெல்வேலி ஸ்பெஷல் எள்ளு பொடி. இந்த எள்ளு பொடி இட்லிக்கு மட்டுமல்லாமல் தோசைக்கும் சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும். ஒரே மணக்கும் எள்ளுப்படி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 வெள்ளை பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன் பின் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும். வறுத்து இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

மீண்டும் அதே கடாயில் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு காய்ந்த வத்தல், சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களையும் தட்டிற்கு மாற்றி விடலாம்.

அடுத்ததாக அதை கடாயில் ஒரு கப் அளவு கருப்பு உளுந்து சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த உளுந்தை அதைத் தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து நாம் உளுந்து எடுத்த அதே அளவிற்கு ஒரு கருப்பு எள் பயன்படுத்த வேண்டும். ஒரு கப் உளுந்துக்கு ஒரு கப் சம அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு கப் கருப்பு எள் கடாயில் சேர்த்து பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

வறுத்த அனைத்து பொருட்களையும் தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி வெல்லம் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

உப்புமா பிடிக்காதவர்களுக்கு… அரிசி ரவை வைத்து பாரம்பரியமான உப்புமா கொழுக்கட்டை!
இப்பொழுது ஊரே மணக்கும் வாசனையில் காரசாரமான எள்ளு பொடி தயார். இந்த பொடியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி இட்லி மற்றும் தோசைக்கு வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.