காய்கறி இல்லாத சமயங்கள் முதல் சிறப்பாக சாப்பிட வேண்டும் என தோன்றும் பல நேரங்களில் நமக்கு கை கொடுப்பது முட்டை தான். முட்டை வைத்து எக்கச்சக்கமான ரெசிப்பிகளை நொடியில் செய்து விடலாம். ஒவ்வொரு முறையும் புதுவிதமாக சமைக்க விரும்புவர்களுக்கு முட்டை மிகவும் பக்கபலமாக இருக்கும். முட்டை பயன்படுத்தி எந்த வகையான தொக்கு, கிரேவி, குழம்பு என வைத்தாலும் அசத்தலாகத்தான் கிடைக்கும். இந்த முறை பெரிதாக எந்த மசாலாக்களும் பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் இளமையான வீட்டு மசாலாக்களை பயன்படுத்தி அருமையான முட்டை தொக்கு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் மூன்று அல்லது ஐந்து முட்டைகளை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதை ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.
ஒரு நிமிடம் கழித்து நாம் அவித்து வைத்திருக்கும் முட்டைகளை மசாலாவுடன் சேர்த்து பிரட்டிக் கொள்ளலாம். இரண்டு நிமிடம் வரை முட்டையை நன்கு பிரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மீதம் இருக்கும் அதை எண்ணையில் அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்த ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய், ஐந்து பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளலாம். இதையும் வதங்கிக்கொண்டிருக்கும் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது வாசனைக்காக இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் கோதுமை மாவு அப்பம்! இனிப்பு ரெசிபி இதோ…
தக்காளி நன்கு மசிந்த பிறகுமசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
மசாலாவில் இருந்து எண்ணெய் தனியாக பிறந்து வரும் நேரத்தில் முட்டைகளை சேர்த்துக் கொள்ளலாம். முட்டை சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்கு கிளரி கொடுத்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முட்டை கிரேவி தயார்.