பெரும்பாலும் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிக்கு சுலபமாக செய்யக்கூடிய ஒரு உணவு வகையை தான் தேர்ந்தெடுப்போம். காரணம் காலை நேர பரபரப்பில் எளிமையாக செய்யக்கூடிய ஒன்றை தான் பலரும் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் எளிமையாக செய்யக்கூடிய அந்த ரெசிபி சுவையோடு சத்தும் நிறைந்ததாக இருந்தால் அன்றைய நாளை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கும். அப்படி ஒரு எளிமையான சத்தான சுவையான ரெசிபி தான் எக் சப்பாத்தி. இதை குழந்தைகளுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கொடுத்து விடலாம். வாருங்கள் இந்த எக் சப்பாத்தி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
எக் சப்பாத்தி செய்வதற்கு முதலில் ஒன்றரை கப் அளவிற்கு சப்பாத்தி மாவு எடுத்து அதனை பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதில் நான்கிலிருந்து ஐந்து சப்பாத்திகள் வரை செய்யலாம் இப்பொழுது தனியாக ஒரு பவுலில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த முட்டையுடன் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயம், பாதி தக்காளி, ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கொடுப்பது என்றால் பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம்.
வாவ்! முட்டையை வைத்து முட்டை பொரியல் ஒரு முறை வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்!
இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து இதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். முட்டையை நன்கு அடித்த பிறகு இதனை வைத்து விடலாம். இப்பொழுது நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை சப்பாத்திக்களாக உருட்டி தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
தேய்த்த சப்பாத்திகளை தோசை கல்லில் எண்ணெய் தடவி சேர்க்கவும். சப்பாத்தி ஒரு புறம் வெந்ததும் அதனை மறுபுறம் திருப்பி விட்டு நாம் கலந்து வைத்திருக்கும் முட்டையிலிருந்து ஒரு கரண்டி எடுத்து சப்பாத்தியின் மேல் ஊற்ற வேண்டும். சப்பாத்தி வெந்ததும் இதனை திருப்பி விட்டு முட்டை ஊற்றிய பகுதி நன்கு வேக விடவும். முட்டை வெந்ததும் இதனை எடுத்துவிடலாம். அவ்வளவுதான் சுவையான எக் சப்பாத்தி தயாராகிவிட்டது…!