வெயிலின் தாக்கம் குறைந்து தற்பொழுது மழையில் தாக்கம் ஏற்பட துவங்கியுள்ளது. திடீரென ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாக தொடர்மழை, கனமழை என அடுத்தடுத்து மழைக்காலங்கள் வரத் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் ஏற்படும் சளி காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு குறைவே இல்லாமல் இருக்கும். இந்த சமயங்களில் தொண்டை கரகரப்பு, தொண்டைப்புண், வயிற்று உபாதைகள், தடுமல், சளி என அனைத்திற்கும் ஏற்ற விதமாக தேங்காய்ப்பால் வைத்து அருமையான ரசம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
ஒரு அகலமான கடாயில் பட்டை இரண்டு துண்டு, கிராம்பு 10, ஏலக்காய் 10, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மல்லி, , சாய்ந்த வத்தல் இரண்டு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வருத்துக்கொள்ள வேண்டும்.
வருத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்று இரண்டாக பரபர என வரும் அளவிற்கு பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தக்காளி பழங்களை நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி பழத்தை மிக்ஸியில் சேர்க்காமல் கைகளால் பிசைந்து கூலாக மாற்றிக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அடுத்ததாக அரை தேக்கரண்டி கடுகு, இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கொத்து கருவேப்பிலை, அரை தேக்கரண்டி மஞ்சள், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் பிசைந்து வைத்திருக்கும் தக்காளி விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி விழுது எண்ணெயுடன் சேர்த்து வதங்கும் நேரத்தில் பத்து முதல் 15 சின்ன வெங்காயம், ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து ஒன்று இரண்டாக இடித்து இதே கடாயில் சேர்க்க வேண்டும்.
வெங்காயம் லேசாக வதங்கிய பிறகு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வதக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் ரசப்பொடியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
பல நாள் ஆனாலும் கெட்டுப்போகாத கிராமத்து ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு குழம்பு!
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் கெட்டியான ஒரு கப் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். தேங்காய் பால் சேர்த்த பிறகு சுவைக்கு ஏற்ப கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மிதமான தீயில் சூடு படுத்தி கொள்ள வேண்டும்.
தேங்காய் பால் ரசம் செய்யும் பொழுது ரசம் கொதிக்க அவசியம் இல்லை. கொதி வருவதற்கு முன்பாக முறை கூடி பொங்கி வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடலாம். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.