காலை, மாலை என இரு வேலைகளிலும் இட்லி மற்றும் தோசை என டிபன் சாப்பிடுபவர்களுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியாக சட்னி செய்யாமல் வித்தியாசமாகவும் புது முறையிலும் சட்னி செய்து கொடுக்கும் பொழுது சாப்பிடுபவர்களுக்கு திருப்தியாகவும் மேலும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும் வகையிலும் அமையும். தினமும் வீட்டில் வழக்கமாக செய்யும் சட்னிகளை விட புதிதான மற்றும் எளிமையான சட்னி ரெசிபி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த முறை கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை இவைகளை பயன்படுத்தி கர்நாடகா ஸ்பெஷல் கோலார் சட்னி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த சட்னி செய்வதற்கு முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒன்றை தேக்கரண்டி கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
வேர்க்கடலை பொன்னிறமாக வறுபட்டதும், வறுத்த இரண்டு பொருட்களையும் தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து விடலாம். கடாயில் மீதம் இருக்கும் அதே எண்ணெயில் 5 வெள்ளை பூண்டு, நன்கு பழுத்த தக்காளி பழம் ஒன்று சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கி மசிந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி சீரகம், கைப்பகைப்பிடி அளவு கருவேப்பிலை, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் ஏழு, பெரிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
மிதமான தீயில் இரண்டு நிமிடம் வதக்கினால் போதுமானது, அதன்பின் அடுப்பை அணைத்து விடவும். இப்பொழுது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சட்னி அரைக்கும் பொழுது அரை தேக்கரண்டி கல்லுப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த சட்னிக்கு தேவையான தாளிப்பு தயார் செய்து கொள்ளலாம். அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்து இறக்கினால் சுவையான கோலார் சட்னி தயார். சட்னி கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சட்னி வழக்கமான தக்காளி சட்னி போல அல்லாமல் கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்யும் பொழுது சுவை கூடுதலாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.