பொதுவாக நம் வீடுகளில் வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று புதுவிதமாக செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் எந்த காய்கறியை பயன்படுத்தி புதுமை சமையல் செய்வது என்பதில் சில குழப்பமும் இருக்கும். நம் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தாத மற்றும் வேண்டாம் என ஒதுக்கும் காய்கறிகளான கோவக்காய் , நூக்கல் போன்ற காய்கறிகள் வைத்து அருமையான சட்னி ரெசிபி செய்யலாம் வாங்க. அட்டகாசமான சுவையின் காய்கறி சட்னி செய்வதற்கான ரெசிபி இதோ.
இந்த தொகுப்பில் முதலில் கோவக்காய் வைத்து சட்னி செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்.
முதலில் 150 கிராம் அளவுள்ள கோவக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கோவக்காயை லேசாக வட்ட வடிவில் நறுக்கி எடுத்துக் கொண்டால் சமைப்பதற்கு எளிமையாக இருக்கும்.
அடுத்து ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, காய்ந்த வத்தல் நான்கு, வெள்ளைப் பூண்டு 5 சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். பத்து சின்ன வெங்காயம், சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
மீண்டும் அதே கடாயில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கோவக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மிதமான தீயில் மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது வதக்கியை இரண்டு பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளலாம். அரைக்கும் பொழுது கல் உப்பு சேர்த்து அரைத்தால் கோவக்காய் சட்னி தயார்.
நான்கு முட்டை மட்டும் இருந்தால் போதும்…. முட்டை பூண்டு காரம் செய்வதற்கான ரெசிபி!
அடுத்ததாக நூக்கல் வைத்து சட்னி செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்.
இந்த முறை 100 முதல் 150 கிராம் அளவுள்ள நூக்கல் ஒன்றை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் எண்ணெய் சேர்க்காமல் நூக்கலை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஐந்து பல் வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இறுதியாக கைப்பிடி அளவு தேங்காய் துருவல், கைப்பிடி அளவு மல்லி இலை, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ளலாம். இப்பொழுது வதக்கி அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்தால் நூக்கல் சட்னி தயார்.