தக்காளி, வெங்காயம் வைத்து மட்டும் தான் காரச் சட்னி செய்ய முடியுமா? சிறுதானியமான கம்பு வைத்து கார சட்னி செய்வதற்கான ரெசிபி இதோ!

பொதுவாக காரச் சட்னி என்றாலே நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது தக்காளி சட்னி அல்லது வெங்காயம் வைத்து செய்யப்படும் காரச் சட்னி தான். தேங்காய் சட்னியை விட கார சட்னிக்கு எப்பவுமே மவுசு அதிகம் தான். இப்படி அனைவருக்கும் பிடித்த காரச் சட்னியை இன்று ஹெல்த்தியான சட்னியாக மாற்றலாம் வாங்க.. எப்போதும் செய்யும் காரச் சட்னியை இந்த முறை சிறு தானியமான கம்பு தானியம் வைத்து ஹெல்த்தியான மற்றும் வித்தியாசமான முறையில் செய்வதற்கான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்ததாக 5 பல் இடித்த வெள்ளைப் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது காரத்திற்கு ஏற்ப 7 முதல் 10 காய்ந்த வத்தல், நீளவாக்கில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதக்கி கொண்டால் போதுமானது.

அடுத்ததாக ஒரு கப் கம்பு தானியத்தை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் ஐந்து நிமிடம் வரை எண்ணையோடு சேர்த்து கம்பு வை நன்கு வதக்க வேண்டும். அடுத்ததாக நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கி கொள்ளலாம். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இப்பொழுது வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கம்பு துவையல் தயார்.

மழை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லையை நொடியில் சரி செய்யும் வெற்றிலை சாதம்!

ஒரு சிறிய கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து தேவையான அளவு தண்ணீர் கலந்து இறக்கினால் சுவையான கம்பு சட்னி தயார்.

Exit mobile version