சிக்கன் வைத்து காரம் குறைவான வெள்ளை சால்னா! சுவையான ரெசிபி இதோ…

சிக்கன் வைத்து பொதுவாக காரசாரமாக சிவக்க சிவக்க மசாலா கலந்து குருமா, தொக்கு, சால்னா வகைகள் செய்வது வழக்கமான ஒன்று. . இந்த முறை சற்று வித்தியாசமாக அதை சிக்கன் வைத்து காரம் சற்று குறைவாக வெள்ளை சால்னா செய்வதற்கான எளிமையான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிய துண்டு பட்டை, மூன்று கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக பொடியாக பொடியாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளலாம். இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் 400 முதல் 500 கிராம் அளவுள்ள சிக்கனை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிக்கன் சேர்த்து பிறகு அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு எண்ணெயோடு சிக்கனை வதக்க வேண்டும். இந்த நேரத்தில் தேங்காய் மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம்.

அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், ஆறு முந்திரி பருப்பு, ஆறு பாதாம் பருப்பு, அரை தேக்கரண்டி கசகசா, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரைத்தக்கரண்டி சீரகம், அரைக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி பொரிகடலை, இரண்டு பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக விழுதுகளை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கைக்காய் வைத்து காரத்திற்கும் புளிப்பிற்கும் குறைவே இல்லாத அட்டகாசமான புளித்தொக்கு ரெசிபி!

அனைத்து விழுதுகளை சிக்கன் வதங்கும் குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கூடுதலாக தண்ணீர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ள வேண்டும். குக்கரை மூடி மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

குக்கரில் மூன்று விசில்கள் வந்து அழுத்தம் குறைந்த பிறகு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சிக்கன் வெள்ளை சால்னா தயார். இந்த சால்னா சூடான சாதம் மட்டுமின்றி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, புலாவு, ஆப்பம், இடியாப்பம் என அனைத்து வகையான சாப்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும்.