பலவிதமான காய்கறிகள் சேர்த்து காரம் சற்று குறைவாக சுவை கூடுதலாக இருக்கும் வெள்ளை குருமா அனைவருக்கும் பிடித்தமான ரெசிபிகளில் ஒன்று. இது சப்பாத்தி, பூரி, பரோட்டா, ஆப்பம், இடியாப்பம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும். இந்த முறை சற்று வித்தியாசமாக காய்கறிகளுடன் சிக்கன் சேர்த்து அருமையான சிக்கன் வெள்ளை குருமா செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு குழி கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு தேக்கரண்டி மிளகு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய் 3 , ஒரு கொத்து கருவேப்பிலை, துருவிய இஞ்சி இரண்டு தேக்கரண்டி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது இதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் 500 கிராம் அளவுள்ள சிக்கன் கறியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சிக்கன் சேர்த்து கலந்து கொடுத்த பிறகு அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி கொள்ள வேண்டும்.
இப்பொழுது தீயை மிதமாக வைத்து ஐந்து நிமிடம் சிக்கனை எண்ணெயோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். அதாவது கேரட், உருளைக்கிழங்கு என நமக்கு பிடித்தமான காய்கறிகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதன் பிறகு இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் சிக்கன் சேர்த்து பத்து நிமிடம் வரை நன்கு வதக்கிக் கொள்ளலாம். இதில் இரண்டு கப் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது தேங்காய் பால் எடுக்கும் பொழுது முதல் பாலை தவிர்த்து இரண்டாவதாக எடுக்கும் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கனில் அதை சுவையில் கத்திரிக்காய் பொடி கறி! எளிமையான ரெசிபி இதோ…
தேங்காய் பால் சேர்த்த பிறகு மூடி போட்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சிக்கன் நன்கு வெந்து உள்ளதா என ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் முதல் எடுத்த தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், இரண்டு கொத்து கருவேப்பிலை, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு இரண்டு தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளலாம். கெட்டி தேங்காய்ப்பால் சேர்த்த ஒரு நிமிடத்தில்அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது சுவையான சிக்கன் வெள்ளை குருமா தயார்.