பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாக தற்பொழுது மாறி உள்ளது. அதிலும் சிக்கன் பிரியாணி சொல்லவே வேண்டாம். கமகமக்கும் பாசத்துடன் இந்த முறை சிக்கன் வைத்து பிரியாணி செய்யாமல் பாரம்பரிய முறையில் மண் பாத்திரம் பயன்படுத்தி மண்சட்டி சோறு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றரை கப் பொன்னி அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்டி சோறு செய்வதற்கு மண் சட்டியை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு ஏலக்காய், ஒரு நட்சத்திர சோம்பு, ஒரு பெரிய துண்டு பட்டை, 3 கிராம்பு , ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய 20 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு நிறம் மாறியதும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வரை பச்சை வாசனை செல்லும் நேரம் வரை வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக நன்கு பழுத்த மூன்று தக்காளி பழங்களை நீளவாக்கில் பொடியாக நறுக்கி சட்டியில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் தேவையான அளவு மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். சிக்கன் சேர்த்த பிறகு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வரை வதக்கி கொடுக்க வேண்டும். இப்பொழுது ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் விதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலே முறுமுறுப்பாக உள்ளே பஞ்சு போல மிருதுவாக இருக்கும் முருங்கைக்கீரை அடை! ரெசிபி இதோ…
அதற்கு ஏற்ப ஒன்றரை டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்து வரும் நேரத்தில் நான் ஊற வைத்திருக்கும் அரிசியை சட்டியில் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக பாதி எலுமிச்சை பழ சாறு சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது மிதமான தீயில் அடுப்பை வைத்து சரியான தட்டு போட்டு சட்டியை மூடி விட வேண்டும்.
அதன்மேல் அம்மிக்கல், உரல் போன்ற கனமான பொருளை வைத்து நன்கு இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். மிதமான தீயில் அரை மணி நேரம் வேக வைக்க வேண்டும் அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.
45 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான சிக்கன் சட்டி சோறு தயார்.. இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவை அருமை அருமையோ அருமையாக இருக்கும்.