கிராமத்து பக்குவத்தில் வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு! பக்குவமான ரெசிபி இதோ…

கிராமங்களில் உடல் அசதி, கை கால் வலி, உடல் பலகீனம் ஏற்படும் நேரங்களில் நாட்டுக்கோழி வைத்து காரசாரமாக மசாலா தயார் செய்து சாப்பிடும் பொழுது உடனடியான நிவாரணம் கிடைப்பது போல இருக்கும். அப்படி சாப்பிடும் நாட்டுக்கோழி சுவையிலும் மனத்திலும் குறைவே இல்லாமல் நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும். இந்த முறை கிராமத்து பக்குவத்தில் வறுத்து அரைத்த மசாலா வைத்து நாட்டுக்கோழி குழம்பு செய்வதற்கு தேவையான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

நாட்டுக்கோழி குழம்பு வைப்பதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு சக்கரண்டி அரிசி, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி கசகசா, காரத்திற்கு ஏற்ப சாய்ந்த வத்தல் ஐந்து, ஒரு சிறிய துண்டு விரலி மஞ்சள் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரம் கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக காய்ந்த வத்தல் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது வருத்த பொருட்களை தனியாக சிறிது நேரம் ஆறவைத்து அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 10 பல் வெள்ளை பூண்டு,பொடியாக நறுக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி, 10 சின்ன வெங்காயம் சேர்த்து நல்ல வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் தக்காளி பழம் ஒன்று சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி பழம் நன்கு வதங்கியதும் இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து அதன் பிறகு முதலில் அரைத்த மசாலாவுடன் இப்பொழுது வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

மழை காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல், சளி தொல்லையிலிருந்து விடுபட மருந்து குழம்பு ரெசிபி இதோ…

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா கூடுதலாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து மிதமான தீயின் கொதிக்க விட வேண்டும். குறைந்தது 15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான கிராமத்து ஸ்டைல் நாட்டுக்கோழி தயார்.