பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி வருவதால் தொடர்ந்து படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை செய்து கொடுத்து மகிழ்விக்கும் பொழுது படிப்பில் அதிக கவனம் ஏற்படும்.. மேலும் ஊட்டச்சத்திற்கு குறைவே இல்லாத உணவையும் தயார் செய்து கொடுக்க வேண்டும். அதனால் இந்த முறை சீஸ் வைத்து குழந்தைகளுக்கு பிடித்த மசாலா தோசை செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, மூன்று பல் வெள்ளைப் பூண்டு பொடியாக நறுக்கியது, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
வெங்காயம் பாதியாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்கி கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி மஞ்சள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
இப்பொழுது மசாலா நன்கு வதங்கிய பிறகு 100 கிராம் பன்னீரை துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். பன்னீர் சேர்த்த பிறகு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா தயாராக உள்ளது.
அடுத்ததாக தோசை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எப்போதும் போல தோசை ஊற்றிக் கொள்ள வேண்டும். இதன் உள்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் தாராளமாக நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பத்து நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆக மஸ்ரூம் தொக்கு ரைஸ்!
தோசையின் நடுப்பக்கத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பன்னீர் மசாலாவை வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மேல் பக்கமும் கூடுதலாக ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய சீஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தோசையே நன்கு முறுகலாக வேகவைத்து எடுத்தால் சுவையான சீஸ் தோசை தயார்.
இந்த தோசை சாதாரண தோசை போல அல்லாமல் சீஸ், பன்னீர் மசாலாவுடன் இணைந்து சாப்பிடுவதற்கு சுவை கூடுதலாகவும் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதத்திலும் சிறப்பாக அமைந்திருக்கும். மேலும் இந்த தோசை சாப்பிடுவதற்கு சட்னி என எந்தவித சைடிஷ்சும் தேவைப்படாது அப்படியே சாப்பிட்டுவிடலாம்.