வீட்டில் எப்பொழுதும் காலை மற்றும் மாலை வேலைகளில் இட்லி, தோசை என தொடர்ந்து ஒரே விதமான சமையலை சமைக்கும் பொழுது அதற்கு சைடிஷ் ஆக வைக்கும் சட்னி சற்று வித்தியாசமாகவும் புதுசு புதுசாகவும் வைக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்கள் திருப்தியாகவும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் இட்லி மற்றும் தோசைக்கு தேங்காய் சட்னி, காரச் சட்னி, சாம்பார் என செய்யாமல் வித்தியாசமான சட்னி ரெசிபிகளை செய்து கொடுத்து அசத்த விரும்புவர்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். வாங்க அருமையான சம்மந்தி சட்னி செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…
ஒரு மிக்ஸி ஜாரின் ஒரு கப் துருவிய தேங்காய், இரண்டு காய்ந்த வத்தல், சிறிதளவு புளி, இரண்டு கொத்து கருவேப்பிலை, அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் அரைக்கும் பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் சற்று தாராளமாக சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
கடுகு நன்கு பொரிந்து வரும் நேரத்தில் நீளவாக்கில் நறுக்கிய ஐந்து முதல் ஏழு சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் விழுதுகளை சேர்த்த பிறகு நன்கு கலந்து கொடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேர்த்த பிறகு சட்னி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது சூடான சுவையான தேங்காய் சம்மந்தி தயார். இந்த சம்பந்தி தோசையோடு அல்லது ஆபத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.