பண்டிகை நாட்களில் சுவையாக வித்தியாசமாக கேரட் பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!

கேரட் பாயாசம் வித்தியாசமான சுவையான ரெசிபியாகும். கேரட்டை வைத்து அல்வா செய்து பார்த்திருப்போம். ஆனால் கேரட் வைத்து செய்யும் பாயாசம் பலரும் முயற்சி செய்து பார்த்திருக்க மாட்டோம். ஒரு முறை இந்த கேரட் பாயாசத்தை செய்து பார்த்தால் பிறகு அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவிற்கு இந்த கேரட் பாயாசம் சுவை நிறைந்ததாக இருக்கும். பண்டிகை நாட்களில் வழக்கமாக செய்யும் பாயாசத்திற்கு பதிலாக வித்தியாசமான இந்த கேரட் பாயாசத்தை முயற்சி செய்து பாருங்கள்.

நவராத்திரிக்கு சுலபமாக செய்யலாம் சுவையான இந்த ரவை பாயாசம்…!

கேரட் பாயாசம் செய்வதற்கு முதலில் 20 முந்திரிப் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் அளவு பாலை நன்கு காய்ச்சி எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பு ஊறியதும் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலில் கொஞ்சமாக ஊற்றி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கால் கிலோ அளவு கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வேகவைத்து எடுத்த கேரட்டை ஆற வைக்கவும். கேரட் ஆறியதும் இதனை வேக வைத்த தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த கேரட் விழுதுடன் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் முந்திரி விழுதையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இப்பொழுது காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இதனை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். கேரட் பாலில் வெந்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும். பச்சை வாசனை போனதும் கால் கப் அளவு மில்க் மெயிட் ஊற்றி கலக்கி கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்ததும் இறக்கி விடலாம். பாயாசம் கொஞ்சம் ஆறியதும் 300 கிராம் அளவு சீனி சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலக்கவும். ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு சாரப்பருப்பை இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். பருப்பு நன்றாக வறுபட்டதும் பாயாசத்துடன் கலந்து கொள்ளவும். இந்த கேரட் பாயாசம் நன்றாக ஆரியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியானதும் பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான கேரட் பாயசம் ஜில்லென்று தயாராகி விட்டது…!