உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் குழந்தைகள் இவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவு அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலமாக சுறுசுறுப்பாகவும் உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் புரோட்டின் நிறைந்த உணவு வகைகளை தேடித்தேடி சாப்பிடுபவர்களுக்கு இந்த பட்டர் பீன்ஸ் மிகவும் உதவியாக இருக்கும். இப்பொழுது பட்டர் பீன்ஸ் வைத்து அருமையான தேங்காய் பால் புலாவ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் 200 கிராம் அளவுள்ள பட்டர் பீன்ஸ் வாங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து உள்ளே இருக்கும் விதை பகுதியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கப் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைமணி நேரத்திற்கு முன்பாக ஊறவைத்து கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் அண்ணாச்சி பூ ஒன்று, கல்பாசி சிறிதளவு, பட்டை இரண்டு துண்டு, கிராம்பு இரண்டு துண்டு, ஏலக்காய் 2 துண்டு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி சீரகம், ஒரு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி குக்கரில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் தக்காளி பழம் கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதுமானது.
இதை அடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்து வதக்கி கொள்ளலாம். அடுத்து கைப்பிடி அளவு புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இப்பொழுது நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் பட்டர் பீன்ஸை குக்கரில் சேர்த்து எண்ணெயோடு நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் என்ற கணக்கில் 4 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். நாம் இந்த முறை தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் பயன்படுத்த உள்ளோம். அதனால் இரண்டு கப் அளவு தேங்காய் பால் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அட இதுல கூட ரசம் செய்யலாமா? வாயை பிளக்க வைக்கும் சுவையில் பைன் ஆப்பிள் ரசம்!
அதன் பிறகு அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்து கொடுத்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடிவிட வேண்டும்.
மிதமான தீயில் மூன்று விசில்கள் வைத்து இறக்கினார் சுவையான பட்டர் பீன்ஸ் புலாவ் தயார். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேடி சாப்பிடுபவர்களுக்கு இந்த பட்டர் பீன்ஸ் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.