இனி பட்டர் நாண் சாப்பிட ரெஸ்டாரன்ட் செல்ல வேண்டாம்… ஈஸ்ட் எதுவும் சேர்க்காமல் வீட்டிலேயே எளிமையான நாண் செய்வதற்கான ரெசிபி இதோ!

வீடுகளில் கோதுமை மற்றும் மைதா வைத்து சப்பாத்தி, பரோட்டா என எளிமையாக செய்தாலும் நாண் செய்வது அவ்வளவு எளிது அல்ல. அதிலும் ஹோட்டல் சுவையில் பட்டர் சேர்த்து செய்யப்படும் நாணிற்கு தனி சுவைதான். இந்த முறை ஹோட்டல் சுவையின் வீட்டிலேயே ஈஸ்ட் சேர்க்காமல் நாண் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

ஒரு அகலமான பாத்திரத்தில் அரைக்கப் தயிர், கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா, அரை தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து கலந்து கொள்ளும் பொழுது முறை போல நன்கு பொங்கி வரும். அதை அப்படியே ஓரமாக வைத்துவிடலாம்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் நமக்கு தேவையான அளவு மைதா, தேவையான அளவு உப்பு, இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவில் நாம் முதலில் தயார் செய்து வைத்திருக்கும் தயிர் கலவைகளை சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இதனுடன் தண்ணீர் சேர்க்காமல் மிதமான சூட்டில் இருக்கும் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்படி மாவு சப்பாத்தி பதத்திற்கு நன்கு கெட்டியாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை குறைந்தது 2 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

இரண்டு மணி நேரம் கழித்து மாவை மீண்டும் ஒருமுறை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சப்பாத்தி போல நீளவட்ட வடிவில் தேய்த்துக் கொள்ளலாம். அதன் மேல் கருப்பு எள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு முறை தேய்த்துக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து தித்திப்பிற்கு பஞ்சமே இல்லாத ஹெல்தியான சம்பா ரவை அல்வா ரெசிபி!

இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நாம் வட்ட வடிவில் திரட்டி வைத்திருக்கும் மாவை தோசை கல்லில் சேர்த்துக் கொள்ளலாம். முன்னும் பின்னும் பொன்னிறமாக வெந்து புசுபுசுவென வரும் நேரத்தில் தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். நாண் சூடாக இருக்கும் பொழுதே அதன் மேல் பட்டர் தடவினால் சுவையான பட்டர் நாண் தயார். இந்த நாண் உடன் சிக்கன் பட்டர் மசாலா, மட்டன் கிரேவி, கடாய் மசாலா வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.