மாலை நேரங்களில் டீ அல்லது காபி குடிக்கும் பொழுது இடையே நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கும். அப்படி மாலை நேரங்களில் வீடுகளில் டீ காபி குடிக்கும் பொழுது வீட்டிலேயே எளிமையான முறையில் பலகாரங்கள் செய்து பள்ளி மற்றும் கல்லூரி முடித்து வரும் குழந்தைகளுக்கு உணவு இடைவேளையாக பரிமாறப்படுவது இயல்பு. இந்த முறை வீட்டில் இருக்கும் பிரட் வைத்து அருமையான மெதுவடை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் தேவைக்கு ஏற்ப 6 முதல் 8 பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் ஓரங்களில் இருக்கும் பகுதியை நீக்கிவிட்டு நடுவே இருக்கும் பஞ்சு போன்ற பகுதியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.
நறுக்கிய பகுதியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதில் இரண்டு குழி கரண்டி அளவிற்கு கெட்டி தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இறுதியாக அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
ஒரு நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும். அடுத்ததாக இதில் 50 கிராம் ரவை, 125 கிராம் அரிசி மாவு, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இவற்றை சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அரை தேக்கரண்டி சமையல் சோடா, பொடியாக துருவிய சிறிய துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை மீண்டும் ஒரு கரண்டி கெட்டி தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த மாவு கலவையை 10 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும். 10 நிமிடம் கழித்து ஒரு அகலமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் இந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து மெதுவடைக்கு நடுவே குழி அமைப்பு செய்து இந்த மாவை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படியே சூடான எண்ணெயில் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் பொறித்து எடுத்தால் சுவையான பிரட் மெதுவடை தயார்.