முட்டை இல்லாமல் பிரட் வைத்து தித்திப்பான புட்டிங் ரெசிபி இதோ..

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகளை அடிக்கடி கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து கொடுத்து அசத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த புட்டிங் ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். இந்த முறை எளிமையாக கிடைக்கும் பிரட் வைத்து முட்டை சேர்க்காமல் சுலபமான புட்டிங் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் அரை கப் வெள்ளை சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் சூடு படுத்த வேண்டும். சர்க்கரை மெதுவாக கரைந்து பொன்னிறமாக மாறி கேரமல் பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். நாம் எந்த பாத்திரத்தில் புட்டிங் செய்வதாக உள்ளோமோ அந்த பாத்திரத்தில் அடி பக்கத்தில் இந்த கேரமலை ஒரு சேர ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பால் நன்கு கொதித்து வரும் நேரத்தில் அரை கப் சர்க்கரை, 3 தேக்கரண்டி கஸ்டர்ட் பவுடரில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து அதையும் பாலோடு கலந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து கைவிடாமல் கிளரும் பொழுது பால் கெட்டி பதத்திற்கு வந்துவிடும். அதன் பிறகு அடுப்பை அணைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நமக்கு தேவையான அளவு பிரட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பிரட் துகள்களையும் பால் கலவையோடு சேர்த்து நன்கு கைவிடாமல் கிளற வேண்டும்.

இப்பொழுது நாம் முதலில் கேரமல் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரத்தில் கேரமல் இருக்கு மேல் பக்கமாக நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை பரப்பிக் கொள்ள வேண்டும். மேல் பக்கம் ஒரே விதமாக வரும் வரை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மூடி போட்டு முடிக்கொள்ளலாம்.

ரெஸ்டாரன்ட் சுவையின் வீட்டிலேயே செய்யக்கூடிய முருங்கைக்கீரை மசாலா சூப்!

இப்பொழுது இட்லி வேக வைக்கும் பாத்திரம் போல ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதன் அடிப்பக்கத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அந்த ஸ்டாண்டின் மேல் பக்கம் நம் மாவு சேர்த்து வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி போட்டு 20 முதல் 30 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

முப்பது நிமிடம் கழித்து குறைந்தது ஒரு 15 நிமிடம் நன்கு ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி சிறுசிறு தொண்டுகளாக நம் விருப்பத்திற்கு ஏற்ப நறுக்கிக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான முட்டை சேர்க்காத பிரட் புட்டிங் தயார்.