இனி வீட்டில் இறால் வாங்கினால் அருமையான காரசாரமான குறிஞ்சி பிரியாணி செய்யலாம் வாங்க!

கடல் உணவு பிரியர்களுக்கு இறால் மிக விருப்பமான உணவு வகையாக இருக்கும். இந்த இறால் வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியான தொக்கு, கிரேவி, ஊறுகாய் என செய்பவர்களுக்கு சற்று வித்தியாசமாக இறால் பிரியாணி அதுவும் குறிஞ்சி ஸ்டைலில் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க…

இன்று இந்த குறிஞ்சி பிரியாணியை இறால் வைத்து செய்யலாம். அதற்காக ஒரு கிலோ இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை கப் கெட்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை குறைந்தது அரை மணி நேரம் தனியாக ஊற வைக்க வேண்டும்.
அந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் 10 சின்ன வெங்காயம், ஐந்து பல் வெள்ளை பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, பச்சை மிளகாய் 3 சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்ததாக ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை இரண்டு, பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை இதனுடன் சேர்த்து எண்ணையோடு நன்கு வதக்க வேண்டும். ஒரு நிமிடம் இந்த கலவையை பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளவும். அதன் பின் இரண்டு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி வதக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் தக்காளி வதங்கும் நேரத்தில் பிரியாணி இருக்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மிருதுவான பால் கொழுக்கட்டை!

ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 3, அண்ணாச்சி பூ, கல்பாசி, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் இரண்டு தேக்கரண்டி கெட்டியான தயிர், பாதி எலுமிச்சை பழச்சாறு, இப்படியாக நறுக்கிய மல்லி புதினா இலைகளை சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக நாம் ஊற வைத்திருக்கும் இறாலை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனுடன் ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரிசி மற்றும் தண்ணீரை கலந்து இறுதியாக உப்பு ஒரு முறை சரிபார்த்து குக்கரை மூடி விடவும். இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான குறிஞ்சி ஸ்டைல் இறால் பிரியாணி தயார்.