அசைவ உணவுகளில் இறாலுக்கு தனி மதிப்பு உள்ளது. ஆனால் எப்பொழுது இறால் கிடைத்தாலும் தொக்கு செய்து சாப்பிடுவது பலரின் வழக்கமாக இருக்கும். இந்த முறை சற்று பெரிய இறால் கிடைக்கும் பொழுது தொக்கு செய்யாமல் சற்று வித்தியாசமாக பிரியாணி செய்து சாப்பிடலாம் வாங்க. உதிரி உதிரியான காரசாரமான இறால் பிரியாணி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு குக்கரில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளலாம். இதில் அண்ணாச்சி பூ இரண்டு, பட்டை இரண்டு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 3, பிரியாணி இலை இரண்டு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இரண்டு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி குக்கரில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலைகள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் இரண்டு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இறுதியாக நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி குக்கரில் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
தாராளமாக பயிறு வகைகளை சேர்த்து புரோட்டின் சத்துக்கு குறைவே இல்லாத காரக்குழம்பு!
தக்காளி நன்கு வதங்கி மசிந்து வரும் நேரத்தில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாவோடு சேர்த்து இறாலை நன்கு மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்த அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் ஒரு கப் பாஸ்மதி அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக அதை எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடிவிட வேண்டும்.
மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான மற்றும் உதிரி உதிரியான இறால் பிரியாணி தயார். பிரியாணியை பரிமாறுவதற்கு முன்பாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொடுத்து பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.