பாகற்காயில் இருக்கும் கசப்பு சுவையின் காரணமாக பலர் இதை சாப்பிட முன்வருவதில்லை. ஆனால் பாகற்காயில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நீரழிவு பிரச்சனை உள்ளவர்கள் இந்த பாகற்காயை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது சாப்பிட வேண்டும். மேலும் குழந்தைகள் இதை சாப்பிடும் பொழுது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். இத்தனை மகத்துவம் நிறைந்த பாவக்காய் ஒரே மாதிரி செய்து சலிப்பை ஏற்படுத்தாமல் பொடிமாஸ் செய்து கொடுத்தால் மிக விரும்பி சாப்பிடுவார்கள். பாகற்காய் பொடிமாஸ் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.
இதற்கு 250 கிராம் அளவுள்ள பாகற்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து உள் இருக்கும் விதை பகுதிகளை நீக்கிவிட்டு புட்டுத்துருவலில் வைத்து நன்கு துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி துருவி எடுத்த பாகக்காய் துருவல்களை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும்.
குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். பாகற்காய் வெந்து வரும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் ஒன்று, நன்கு பழுத்த தக்காளி பழம் இரண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக நாம் அடைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதுகளை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
பச்சை வாசனை செல்லும் வரை இவற்றை வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி சாம்பார் மிளகாய்த்தூள் இவற்றை கடாயில் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்க வேண்டும்.
பஞ்சு போல மிருதுவான இட்லிக்கு… திருநெல்வேலி ஸ்பெஷல் கார எள்ளு பொடி!
இந்த நேரத்தில் நாம் வேக வைத்திருக்கும் பாகற்காய் துருவலை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது பாதி எலுமிச்சை பழச்சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வரை பாகற்காயை கிளறி இறக்கினால் சுவையான பாகற்காய் பொடிமாஸ் தயார். இதை சூடான சாதத்துடன் கிளறி சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். பாகற்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த பொடிமாஸ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் உடல் வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.