பழைய சாதம் கூட ஓகே தான்…. ஆனால் உப்புமா வேண்டவே வேண்டாம் என சொல்பவர்களுக்கு இந்த ரெசிபி!

வீடுகளில் இட்லி மற்றும் தோசை மாவு இல்லாத நேரங்களில் பெரும்பாலும் இல்லத்தரசிகளின் முதல் தேர்வு உப்புமாவாகத்தான் இருக்கும். ஆனால் வீட்டில் உள்ள பலருக்கு இந்த உப்புமா பிடிப்பதில்லை. பழைய சாதம் இருந்தால் கூட ஓகே ஆனால் உப்புமாவா என தெரிவித்து ஓடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி உப்புமா பிடிக்கவே பிடிக்காது என சொல்பவர்களுக்கு கூட ஒரு முறை வரகு அரிசி ரவை வைத்து பிரியாணி ஸ்டைலில் உப்புமா செய்து கொடுத்துப் பாருங்கள். அசத்தும் இந்த சுவைக்கு அடிமையாக மாறிவிடுவார்கள். வரகு அரிசி ரவை பிரியாணி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு கப் வரகு அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் இந்த வரகு அரிசியே சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் இரண்டு துண்டு பட்டை, ஒரு துண்டு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, ஒரு அண்ணாச்சி பூ, அரை தேக்கரண்டி சீரகம், சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு புதினா இலைகள் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்த பிரியாணி செய்வதற்கு பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, காலிபிளவர் சேர்த்து கொள்ளலாம். பொடியாக நறுக்கிய இந்த காய்கறிகளை கடாயில் சேர்த்து எண்ணையுடன் நன்கு வதக்க வேண்டும்.

காய்கறிகள் பாதி அளவு வெந்ததும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி பிரியாணி மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். பிரியாணி மசாலா இல்லாத பட்சத்தில் கறி மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் கோடியாக நறுக்கிய அல்லது அரைத்த ஒரு தக்காளி பழம் விழுதை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி லேசாக வதங்கியதும் ஒரு கப் தயிர் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இப்பொழுது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் வரகு அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் உப்பு கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

வீட்டு இட்லி புசுபுசுன்னு பஞ்சு மாதிரி மிருதுவாக இருக்க ஹோட்டலின் ரகசிய டிப்ஸ்!

தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் வரகரிசியை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் விழாக வண்ணம் நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

மிதமான தீயில் இந்த கலவையை மூன்று நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்க வேண்டும். இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவையான வரகு அரிசி ரவை பிரியாணி தயார். இந்த பிரியாணிக்கு தயிர் வெங்காயம் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.