பிரியாணி என்று சொன்ன உடனே நாவில் பலருக்கு எச்சில் ஊறும். அதிலும் பிரியாணிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஆம்பூர் பிரியாணி அனைத்து பிரியாணி ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு பிடித்த இந்த பிரியாணியை நம் வீட்டில் எத்தனை முறை செய்தாலும் சலித்து போவதுமில்லை. அப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிரியாணியை எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்யாமல் சற்று புதுவிதமான முறைகளில் செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்த விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். அந்த வகையில் ஆம்பூர் ஸ்டைல் கீமா பிரியாணி எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கம் இதோ…
முதலில் ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். இதை அடுத்து பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பிரியாணி இலை ஒன்று, அண்ணாச்சி பூ ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணையோடு நன்கு வதக்க வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி அரைத்த மிளகாய் விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதாவது மிளகாய் தூள் சேர்ப்பதற்கு பதிலாக காய்ந்த வத்தலை நன்கு அரைத்து மசாலாவாக ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய் விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மசாலா கலவையுடன் ஒரு கப் வெட்டி தயிர், பாதி எலுமிச்சை பல சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் 500 கிராம் அளவுள்ள சிக்கன் கீமாவை சேர்த்துக் கொள்ளலாம். கீமா சேர்த்த பிறகு மசாலாவோடு சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
ஐந்து நிமிடம் வேகவைக்கும் பொழுது சிக்கன் நன்கு வெந்துவிடும். அதன் பிறகு ஒரு கப் சீரக சம்பா அரிசிக்கு ஒன்றரை கப் விதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதன்படி முதலில் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் சீரக சம்பா அரிசியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மிதமான தீயில் இரண்டு விசில்கள் வரும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான கீமா பிரியாணி தயார். இந்த பிரியாணியை பரிமாறுவதற்கு முன்பாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையும் வாசமும் அருமையாக இருக்கும்.