நீர்ச்சத்து நிறைந்த நாட்டு சுரைக்காய் வைத்து கூட்டு, பொரியல் மட்டும் தானா….. வாங்க அசத்தலான பிரியாணியே செய்யலாம்!

நீர் சத்து நிறைந்த நாட்டு காய்களில் ஒன்றான சுரக்காய் நம் வீடுகளில் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சுரக்காய் வைத்து சாம்பார், பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல் என வழக்கமாக செய்த அதே ரெசிபி இந்த முறை செய்யாமல் சற்று வித்தியாசமாக இந்த சுரக்காய் வைத்து அருமையான பிரியாணி ஒன்று செய்யலாம் வாங்க. அசத்தலான பிரியாணி செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ..

பிரியாணி செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை முதலில் தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஏலக்காய் 2, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது, ஐந்து முதல் 7 பல் வெள்ளை பூண்டு, கைப்பிடி அளவு கொத்தமல்லி, ஒரு நன்கு பழுத்த தக்காளி, காரத்திற்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு பிரியாணி இலை, ஒரு பெரிய துண்டு பட்டை, ஒரு கடல்பாசி, அண்ணாச்சி பூ இவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.

புதினா இலை நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் இரண்டு தக்காளி பழத்தை மிக்ஸியில் சேர்த்து அரைத்து விழுதுகளாக மாற்றிக் கொள்ளலாம். இந்த தக்காளி விழுதையும் குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும்.

இதை அடுத்து அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை கப் தயிர் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் நம் நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காய் குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரியாணிக்காக சுரைக்காய் நறுக்கும் பொழுது சற்று பெரிய அளவில் நறுக்கிக் கொள்ள வேண்டும். குறைந்தது மூன்று நிமிடம் ஆவது சுரக்காயுடன் மசாலாக்கள் ஒரு சேரும் வரை நன்கு மிதமான தீயில் கலந்து வதக்க வேண்டும்.

ஒரு வெங்காயம் போதும்… அசத்தலான மூன்று வேலைக்கும் தேவையான கறி தயார்!

சுரைக்காயில் உப்பு மற்றும் காரம் பிடித்த உடன் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கலந்து கொடுத்து கொள்ளலாம்.

தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்து சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக குக்கரை மூடி மூன்று விசில்கள் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான சுரைக்காய் பிரியாணி தயார்.