பாதாமில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்கள் இருப்பதால் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அள்ளித் தருகிறது. தினமும் குறைந்தது ஐந்து பாதாம் சாப்பிடும் பொழுது உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இந்த பாதாமை அப்படியே சாப்பிடுவதைவிட ஊற வைத்து மறுநாள் சாப்பிடும் பொழுது அதன் சத்து மேலும் பல மடங்கு அதிகரிக்கிறது. இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த பாதாம் வைத்து அருமையான சுவை நிறைந்த அல்வா செய்யலாம் வாங்க…
இந்த அல்வா செய்வதற்கு முதலில் ஒரு 100 முதல் 150 கிராம் பாதாமை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பாதாமில் இருந்து அதன் தோள்களை நீக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சுத்தம் செய்த பாதாமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம் இதனுடன் நன்கு காய்ச்சி ஆற வைத்த பால் ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் மற்றும் பாதாமை நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பாதாம் விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையை கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும். இதில் வண்ணத்திற்காக குங்குமப்பூ கலந்த பால் அரை கப் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த கலவையை தொடர்ந்து கிளற வேண்டும். அடுத்ததாக கெட்டியாக வரும் நேரத்தில் அரை கப் சர்க்கரை சேர்த்து கலர வேண்டும்.
பாதாம் விழுது நன்கு திரண்டு அல்வா பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் கிலரும் பொழுது கெட்டியான பதத்திற்கு வந்து விடும். இப்பொழுது நாம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பிஸ்தா, பூசணி விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக வாசனைக்கு அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பாதாம் அல்வா தயார்.