வடை என்றதும் பலருக்கும் பருப்பை ஊற வைக்க வேண்டும், அதனை அரைக்க வேண்டும் என பல்வேறு வேலைகள் தான் நினைவுக்கு வரும். ஆனால் இவை ஏதும் செய்யாமலே சட்டென்று ஐந்தே நிமிடத்தில் எளிமையாய் செய்வதற்கு ஒரு சூப்பரான வடை தான் அவல் வடை. அவல் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். இந்த அவலை வைத்து இந்த வடையை செய்வதால் சுவையோடு சத்தும் நமக்கு கிடைக்கும். மாலை நேர தேநீரோடு இந்த அவல் வடையை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
ஹோட்டல் சுவையில் அருமையான வடகறி… இட்லி தோசைக்கு செய்து அசத்துங்கள்!
அவல் வடை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு அவலை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதனை அதிக நேரம் ஊற வைக்கக் கூடாது. ஒரு நிமிடம் ஊற வைத்தால் போதுமானது. அவல் ஒரு நிமிடம் ஊறிய பிறகு இதனை வடித்து அவலை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து வடிகட்டிய அவலை சேர்த்து இப்பொழுது அதனுடன் வேகவைத்து தோல் உரித்த இரண்டு உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது இதில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஒரு மேஜை கரண்டி அரிசி மாவு, இரண்டு மேஜை கரண்டி கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அவல் மற்றும் உருளைக்கிழங்கில் உள்ள ஈரத்தன்மையே போதும் அதனால் தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
இதனை நன்றாக பிசைந்து பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல தட்ட வேண்டும். அதிக தடிமனாக தட்டக் கூடாது. மெல்லிசாக தட்டி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு வானலியில் இதை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இருபுறமும் நன்கு சிவந்து மொறுமொறுப்பாக வரும் வரை பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
வாழைப்பூ இருக்கா? அப்போ இந்த வாழைப்பூ வடை முயற்சி செய்து பாருங்கள்!
அவ்வளவுதான் சுவையான மொறுமொறுவென அவல் வடை தயாராகி விட்டது.