வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயங்களில் குழம்பு மட்டும் வைத்துவிட்டு அதற்கு அப்பளம் ஒன்று பொறித்து வைத்தால் போதும். குழந்தைகள் அப்பளம் சாப்பிடும் கவனத்தில் அப்படியே சாப்பாடும் சாப்பிட்டு விடுவார்கள். அப்பளம் பொதுவாக சாதம், சாம்பார் சாதம், காரக்குழம்பு என அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ் ஆக இருக்கும். இந்த முறை சைடிஷ் ஆக சாப்பிடும் அப்பளம் வைத்து அருமையான கார புளிக்குழம்பு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஐந்து வெங்காயம், ஐந்து வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் மற்றும் பூண்டு பொன்னிறமாக மாறியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி பழம் நன்கு மசிந்து வரும் நேரத்தில் எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாவை நன்கு எண்ணெயோடு கலந்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
இந்த நேரத்தில் மற்றொரு கடாயில் நமக்கு தேவையான அப்பளங்களை பொறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பலங்களை வட்டமாக பொரித்து எடுத்த பிறகு சிறு சிறு துண்டுகளாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
முட்டை வைத்து பத்தே நிமிடத்தில் அட்டகாசமான கோபி மஞ்சூரியன்! ரெசிபி இதோ….
குழம்பு நன்கு கொதித்து கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி வெல்லம் மற்றும் நம் தயார் செய்து வைத்திருக்கும் அப்பளங்களை சேர்த்துக் கொள்ளலாம். அப்பளம் சேர்த்த பிறகு நன்கு கலந்து கொடுத்து இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான அப்பள குழம்பு தயார்.
சூடான சாதத்தில் இந்த குழம்பு ஒன்று போதும் எந்த சைடிஷ் இல்லாமல் தாராளமாக சாப்பிட்டு விடலாம்.